1161.

     கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
     அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
     நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
     எண்ணாதும் எண்ணும்இந்த ஏழைமுகம் பாராயோ.

உரை:

      அழகிய ஞானாமிர்தமே, கரும்பே, எனக்குக் கண் போன்றவனே, எனது அண்ணனே, உனது பொன் போன்ற திருவருள் எனக்கு இயலுமோ? அல்லது எப்பொழுதுமே அஃது எனக்குக் கிடைக்காதோ? வேறே யாதுதான் என்னை அடையுமோ? என்று எண்ணற் காகாதவற்றை யெல்லாம் எண்ணி வருந்தும் ஏழையாகிய என் முகத்தைப் பார்க்க மாட்டாயோ? எ.று.

     திருக்கதவந் திறப்பித்துத் திருமுகங் காண அருளாயோ எனக் கேட்க லுற்றவர் “ஏழைமுகம் பாராயோ” என இரங்கிய வாய்பாட்டால் மொழிகின்றார். கண்ணாரமுது - அழகிய அமுது; “கனவிற் கண்ட கண்ணார் விழுப்பொருள்” (பெருங். 1-43-104) என்றாற் போல. அண்ணன்-தலைவன். ஆர்தல்-நிறைதல். நண்ணுதல்-எய்துதல். திருவருள் எய்துமோ, எய்தாதோ, இடையீடுபடுமோ என்று எழும் எண்ணங்களால் அஞ்சும் நிலைமை தோன்ற, “நண்ணாதோ யாது நணுகுமோ” என்கின்றார். திருவருளின் வன்மையை நோக்க இத்தகைய எண்ணங்கட்கு இடமில்லாமையின், “எண்ணாதும் எண்ணும்” எனவும், அதற்கேது ஏழைமை யென்றும் புலப்படுத்தற்கு “ஏழை” எனவும் இயம்புகின்றார். எண்ணாதது என்பது எண்ணாது என வந்தது; எண்ணலாகாதது என்பது பொருள்.

     இதனால், காட்சி ஆசையால் கையற்று வருந்தி ஆகாத எண்ணங்களால் நெஞ்சு அலைக்கப்படுவது தெரிவித்தவாறாம்.

     (3)