1163. வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
உரை: உயர்ந்து வளமுற்றுத் திகழும் திருவொற்றியூர் உத்தமனே, மலையை வளைத்து வில்லாக அமைத்துக் கொள்ளும் உலக வேந்தே, எனக்கு அருளரசே, எப்பக்கமும் பற்றித் தொங்குகிற துன்பமாகிய சுமைகளைத் தூக்க மாட்டாமல் ஏக்கத்தாற் புலம்புகின்ற ஏழையாகிய என் முகத்தைப் பார்த்தருளாயோ? எ.று.
நெய்தல் வளம் மிக்கதாகலின், “ஓங்கி வளர்ந்தருளும் ஒற்றியூர்” என்கின்றார். துன்பம் மிகுந்து, பொறுக்குமளவை யிறத்தல் தோன்ற “தூங்கிய துன்பச் சுமை சுமக்க மாட்டாது” எனவும், பிறர் பகுத்துக் கொள்ளற் கியலாததாகலின், “ஏங்கியழுகின்ற” எனவும் உரைக்கின்றார். வாங்குதல் - வளைத்தல். மலை-மேருமலை. மன்னவன்-என்றும் உள்ளவன். அரசு என்கிறார் முறை பிறழாது கண்ணோட்டமின்றிச் செய்வினைப் பயனை யூட்டுதல் பற்றி.
இதனால், வினையால் விளைந்த துன்ப மிகுதி சொல்லியவாறாம். (5)
|