1164. தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம்
உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே
சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப்
பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ.
உரை: மெய்த் தொண்டராயினவர்க்கு அருள் புரியும் துணைவனே, நிகரற்ற கடல்விடத்தை யுண்டு திருமாலுக்குத் திருவருள் செய்த திருவொற்றியூர் உத்தமனே, சாடுகின்ற பிறவிப்பிணியால் தாயையிழந்த குழந்தையைப் போல முன்னைவினைத் துன்பத்தை நுகரும் பாவியாகிய என் முகத்தைப் பார்த்தருளாயோ? எ.று.
நினைவிலும் செயலிலும் மெய்ம்மைத் தொண்டராம் புண்ணியமில்லார் தொண்டராதல் கூடாமையின், அங்ஙனம் தொண்டு பட்டார்க்கு வேண்டுவன வேண்டியாங்கு உதவும் சிறப்பு நோக்கித் “தொண்டர்க்கருளும் துணையே” என்கின்றார். கடலைக் கடைந்தும் மத்தாய் நிறுவிய மலையை அழுந்தாதபடி ஆமையாய்த் தாங்கியும் அரும்பாடு பட்டாராதலின், திருமாலுக்கு இடையூறா யெழுந்த நஞ்சினையுண்ட நலத்தை நயந்து, “இணையில் விடமுண்டு அச்சுதற் கருளும் ஒற்றியூர் உத்தமனே” என்று புகழ்கின்றார். பயனை நுகர்வித்தன்றி நீங்காதவன்மை யுடைமை பற்றிப் பிறவி நோயை “சண்டப் பவநோய்” எனவும், தாங்குவாரின்றி வருந்துகின்றமை புலப்படத் “தாயில்லாப் பிள்ளையைப்போல்” எனவும், தனக்குற்ற துன்பம் முன்னைப் பிறவிகளில் உளவாய வினைகளால் உண்டாய தென்றற்குத் தன்னைப் “பண்டைத் துயர் கொளும் பாவி” எனவும் இயம்புகின்றார். பாவிகளைப் பார்த்தல் கூடாதென்பது பற்றிப் பார்க்க விரும்புகின்றிலையோ வென்பார், “இப்பாவி முகம் பாராயோ” என்று பகர்கின்றார். சண்டப் பவநோய் - ஒரு நெறியின்றிச் சாடி வருத்தும் பிறவி நோய்.
இதனால், பழவினையால் வருந் துன்பங்கூறி விண்ணப்பித்தவாறாம். (6)
|