1165. உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
உரை: உள்ளத்தில் ஒளிர்கின்ற பரமனே, ஒற்றியூரில் எழுந்தருளும் உத்தமனே, விளங்குகின்ற உன்னுடைய தேன் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடியை வாழ்த்தி வணங்காமல், தடைப்பட்டுழலும் மனத்துடன் சலிப்புற்று உனது திருமுன்பு சிறிது விலகியிருந்து பார்த்து நிற்கும் ஏழையாகிய என் முகத்தைப் பார்த்தருள்க. எ.று.
தத்துவத் தொகுதிகட் கப்பால் உளதெனப்படும் பரவெளியில் நிலவும் பரம்பொருளாயினும் உள்ளத்தின்கண் ஞானக்கண் கொண்டு நோக்குவார்க்கு ஞான ஒளிப் பொருளாய்க் காட்சி தருவது பற்றி “உள்திகழ்ந்த மேலவனே” என்கின்றார். பரவெளியில் அகளமாய் நிற்கும் பரம்பொருள் திருவொற்றியூர்த் திருக்கோயிலில் சகளீகரித்து உரைப்பார் உரைப்பவை கேட்டருளும் உயர்ந்த உறவினனாய் எழுந்தளுதலால், “ஒற்றியூர் உத்தமனே” என்று உரைக்கின்றார். சகளத் திருமேனியில் திருவடி தாமரை பூப்போல் திகழ்வதால், அதற்கியைய “மட்டிலங்கு மலரடி” என்கின்றார். மட்டு-தேன். பல்வேறு நினைவுகளால் கணந்தோறும் தட்டப்படுவது கொண்டு “தட்டிலங்கு நெஞ்சம்” என்றும், அதனால், நெஞ்சத்தில் சுழற்சி யுண்டாவது தோன்றச் “சஞ்சலித்து” என்றும், கூறுகிறார். சஞ்சலம்-சுழற்சி; கலக்கமுமாம். எட்டி நிற்றலாவது, விலகி நிற்றல். பிறர்க்கு இடையூறாக மொய்த்து நில்லாமல் சந்நிதிக்கண் பிறரெல்லாம் தன்னையொப்பக் கண்டு மகிழ்தற் பொருட்டு விலகி நிற்பது முறையாயினும், தான் விலகி நிற்பதற்கொரு காரணம் படைத்துரைப்பார், “சஞ்சலித்துன் சந்நிதிக்கண் எட்டி நின்று பார்க்கும்” என இயம்புகின்றார்.
இதனால், தமது மனத்துள் தோன்றிய சஞ்சலத்தின் மிகுதி புலப்படுத்தவாறாம். (7)
|