1166.

     நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
     பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே
     மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே
     இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ.

உரை:

      கழுத்தில் விடத்தைக் கொண்ட நாயகனே, ஒரு பாகம் பச்சைநிறம் கொண்ட ஒப்பற்ற மலையே, அறியாமையை நீக்குகிற திருவொற்றியூர் வித்தகனே, நின் திருவருளைப் பெறுவதற்கு மிக்க ஆர்வமுற்று வாடுகின்ற ஏழையாகிய என் முகத்தைப் பார்த்தருளுவாயாக. எ.று.

     நஞ்சு, நச்சு என வந்தது. உண்ட நஞ்சினைக் கழுத்திடத்தே நிறுத்தி, நிறமும் ஒளியும் அதன் உள்ளுறையாகத் திகழும் அருள் நலமும் கண்டுணர்ந்து, “திருநீலகண்டம்” எனச் சான்றோர் பரவும் வகையில் கொண்டிருத்தல்பற்றி, “நச்சை மிடற்று அணிந்த நாயகன்” என்கின்றார். ஒரு பாதி பசுமையும் ஒரு பாதி செம்மையும் கொண்டு விளங்கும் பவளமலை போல் காணப்படுவது பற்றிச் சிவபெருமானை “பச்சை நிறம் கொண்ட பவளத் தனிமலை” என்று புனைந்துரைக்கின்றார். மிச்சை - மித்தை; அஃதாவது அறியாமை. வித்தகன் - ஞானவான். திருவருள் ஞானம் வேண்டி ஆர்வத்தால் ஏங்குமாறு தோன்ற, “அருட்கே இச்சை கொண்டு வாழும் இந்த ஏழை முகம் பாராய்” என்கின்றார். குவ்வுருபு பொருட்டுப் பொருளால் வந்தது.

     இதனால், திருவருள் ஞானம் வேண்டி ஏங்குமாறு கூறப்பட்டது.

     (8)