1167.

     மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
     கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்உடையாய்
     சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன் அருட்
     பால்அயர்ந்து வாடும் இந்தப் பாவிமுகம் பாராயோ.

உரை:

      மாட்டாமையால் திருமால் மனம் சோர்ந்தும் காண முடியாத திருவடியை யுடையவனே, வஞ்சம் புரியும் இருவினையும் ஓய்ந்து கெடுமாறு அருள் செய்யும் கண்களை யுடையவனே, விண்ணுலகத்தை யுடையவனே, சேல் மீன் போன்ற கண்களையுடைய மகளிர் செய்யும் மயக்கத்தினால் உனது திருவருட்பகுதியை மறந்து வருந்தும் இந்தப் பாவியாகிய என் முகத்தைப் பார்த்தருள்க. எ.று.

     அயர்தல் - மனம் சோர்தல். உம்மை, இசைநிறை. “செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்கும் மலர்ப்பாதம்” (திருவம்) என மணிவாசகரும் கூறுதல் காண்க. வினை, தன் பயனை நுகர்விக்கு மிடத்துச் செய்தவனையும் மயக்குதலின், “வஞ்சவினை” என்கின்றார். காலயர்ந்து வாடலாவது, வேரற்றுக் கெடுதல்; தொடர்பறுந்து ஒழிதலுமாம். திருவருள் ஒளியால் இருள் காரணமாக வரும் வினைகெடுவது பற்றி, “வினை வாட அருள் கண்ணுடையாய்” எனவும், நல்வினை, செய்தார் போகம் நுகர்தற்குரிய இடமாய் இறைவன் ஆணைவழி நிற்பதாகலின், “விண்ணுடையாய்” எனவும் விளம்புகின்றார். “சேலயர்ந்த கண்ணார்” என்றவிடத்து, அயர்ந்த என்பது உவமப் பொருட்டு. மயக்கம், ஈண்டுக் காமமயக்கத்தின் மேற்று. அருட்பால் - அருட் பகுதி. திருவருள் பெறும் நெறி யறியாது மயங்குவதுபற்றி, “அயர்ந்து வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ” என்கின்றார்.

     இதனால், அருட்பேற்றிற்குரிய நெறியின் நீங்கி வாடுவது எண்ணி வருந்தியவாறாம்.

     (9)