1168. சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்
சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே
நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும்
பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
உரை: பூங்காக்கள் சூழவுள்ள திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானே, உன்னோடு நெருங்கிய உறவுகொள்ள நினைந்து தொழுதெழுகின்ற மெய்யடியார்களின் தூய நெஞ்சின்கண் எழுந்தருளும் தத்துவ மூர்த்தியே, உலகியல் வாழ்க்கை யென்கிற பாசப்பிணிப்பால் வருந்துகின்ற இந்தப் பாவியாகிய எனது முகத்தைப் பார்த்தருள்க. எ.று
உலகியலில் பெற்றோர், உடன் பிறந்தோர் முதலியோருடைய சுற்றமாந் தன்மையைத் துறந்து, மெய்ம்மைச் சுற்றமாவது மெய்ப்பொருளே யென்றுணர்ந்து அதனிடத்து மெய்யன்பால் தொடர்பு கொள்ள நினைக்கும் சான்றோரைச் “சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்” என்றும், அவர்களுடைய தூய நெஞ்சத்தைக் கோவிலாகக் கொண்டருள்வது இறைவன் இயல்பாதல் உணர்ந்து “சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே” என்றும் கூறுகின்றார். சந்தம்-தூய்மையால் உளதாகும் அழகு. நந்தவனம் - பூஞ்சோலை; இதனை நந்தனம் என வழங்குவதும் உண்டு. உலகியற் பொருள்மேலும் அதனை நுகர்தற்கு, உடன் பிறந்து வாழும் ஏனை யுயிர்மேலும் தொடர்புற்று, அதனால் உண்டாகும் அல்லலிற் கிடந்து ஆழ்ந்து வருந்தும் தம் நிலையை, “வாழ்க்கை யெனும் பந்தமதில் வாடும் பாவி” எனப் பழிக்கின்றார். பந்த வாழ்வால் பாவமே விளைதலின், “பாவி” யென உரைக்கின்றார்.
இதனால், வாழ்க்கையெனும் பந்தத்தின் துன்ப நிலையைச் சொல்லியவாறாம். (10)
|