1169. தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
உரை: தில்லைப் பதியின்கண் எழுந்தருளும் செல்வம் மிக்க பெரு வாழ்வளிக்கும் எங்கள் பெருமானே, அடியவர்களுக்கு விரைந்து அருள் புரியும் திருவொற்றியூர் உத்தமனே, இருள்போன்ற கூந்தலையுடைய மகளிர்பால் உளதாகும் காம வேட்கையின் முடிவறியாமல் வருந்தும் ஏழையாகிய எனது முகத்தைப் பார்த்தருள்க. எ,று.
தில்லைப் பெருங்கோயில் சிவபெருமானுக்குத் தலைமைக் கோயில் என்னும் வழக்குப் பற்றியும், அங்கு அப்பெருமான் தன் அருள் நோக்கி வாழ்வார்க்குச் செல்வ வாழ்வளிப்பது பற்றிச் செல்வன் என்னும் வழக்கு நோக்கியும், “தில்லையிடை மேவும் எங்கள் செல்வப் பெருவாழ்வே” என்று சிறப்பிக்கின்றார். “செல்வம் உயர்கின்ற செல்வர்வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” (கோயில்) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அடியார்க்கு ஒல்லையருளும் என இயைக்க. நினைந்துருகும் மெய்யடியார்க்கு விரைந்து சென்றருளும் இயல்புபற்றிச் சிவபெருமானை, “அடியார்க்கு ஒல்லையருளும் ஒற்றியூர் உத்தமனே” எனப் பராவுகின்றார். அல்-இருள். காமமாகிய குற்றம் முற்றவும் கெடுவதின்மையின், “அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக் கெல்லை யறியாத இந்த ஏழை” என இரங்குகின்றார்.
இதனால், மகளிர் ஆசை முற்றக் கெடாமைக்கு வருந்தியவாறு. (11)
|