117. வாழாத வண்ணமெனைக் கெடுக்கும் பொல்லா
வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந் தந்தோ
பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
பாவியேன் முகம் பார்க்கப் படுவதேயோ
ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
வின்பமே வென்னரசே இறையே சற்றும்
தாழாத புகழ்த் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: சிறிதும் குன்றாத புகழ் பொருந்திய தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, எழுவகைப் பட்ட வலிய பிறப்புத் துன்பத்தை நீக்குகின்ற ஞானாநந்தப் பொருளே, எனக்கு அரசனே, இறைவனே, இனிது வாழாதபடி என்னைக் கெடுத்தலைக்கும் பொல்லாத வஞ்சமுடைய நெஞ்சினால் உலகில் உழன்று மயங்கிப் பாழான மகளிரிடத்தே ஆசை வைத்திருக்கும் பாவியாகிய எனது முகம் நின் கண்ணாற் பார்க்கப்படும் தகுதியுடையதாகுமா? ஆகாது போலும், எ. று.
பொன்றுதல் இல்லாமை புகழ்க்குச் சிறப்பாதலால், “தாழாத புகழ்த் தணிகை மணியே” என்று சாற்றுகின்றார். பிறப்பு வகை ஏழாதலின், “ஏழாய வன்பவம்” என்கின்றார். மக்கள், தேவர், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நாற்காலுடையன, தாவரம் ஆக எழுவகை. எல்லாவுயிர்களையும் இப்பிறப்பு வகையேழும் விடாது பிணித்தலால் “வன்பவம்” என்று குறிக்கின்றார்; இவற்றால் உயிர்கட்குத் துன்பம் உண்டாதலால், “ஏழாய வன்பவத் துன்பம்” என்று கூறுகின்றார். ஞானவின்பம் என எடுத்துரைத்தல் பற்றிப் பவத்துன்பம் வருவிக்கப்பட்டது. இன்பத்தை நல்குவதால், “இன்பமே” என்று புகழ்கின்றார். செய்வினை நோக்கி முறை செய்தல் தோன்ற, “அரசே” என்றும், ஞான நன்னெறி காட்டிக் காத்தல் செய்வதால், “இறையே” என்றும் உரைக்கின்றார். நன்னெறியில் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெற நின்ற உயிரைத் தீ நெறிகட் செலுத்தி வீழ்த்துமாறு கண்டு “வாழாத வண்ணம் எனைக் கெடுக்கும் பொல்லா நெஞ்சத்தால்” என வருந்திக் கூறுகிறார். செந்நெறிக்கண் நில்லாமை நோக்கி மணிவாசகப் பெருமான், “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே” (சதகம்) என்பது காண்க. செந்நெறிக்கண் செலுத்தி வாழ்ந்துயரச் செய்வதும், தீ நெறிக்கண் செலுத்தி வீழ்ந்து கெடச் செய்வதும் ஆகிய இரண்டினையும் செய்வதால் “வஞ்ச நெஞ்சம்” என்று உரைக்கின்றார். உலகியற் பொய்ச் சார்பும் மயக்கமும் எய்திய திறத்தை “உலகில் மாழாந்து” என விளம்புகிறார். கொண்டாற் குரிய தமது பெண்மை நலத்தைக் கண்டார்க் களித்துக் கற்பும் பொற்புமிழந்து கெடும் மகளிரைப் “பாழான மடந்தையர்” எனவும், அவருடைய மயக்க மொழியும் கைசெய் வனப்பும் காணும் பாவியான ஆடவனுள்ள முழுதும் நிறைந்து அவன் நினைவெல்லாம் தம் நினைவேயாகச் செய்தலால் “பாழான மடந்தையர்பாற் சிந்தை வைக்கும் பாவியேன்” எனவும், பாவத்தால் அகம் கறுத்தும் காம மயக்கத்தால் முகம் கறுத்தும் பொலிவிழத்தலால், “பாவியேன் முகம் பார்க்கப் படுவதேயோ” எனவும் இயம்புகின்றார்.
இதனால், உலகியல் மயக்கத்தால் நெஞ்சின் வஞ்சத்தால் மடந்தையர் பாற் சிந்தை வைத்த பாவியர் முகம் பார்க்கத் தகுவதன்று என்று பழித்தவாறாம். (15)
|