55. நாடக விண்ணப்பம்

திருவொற்றியூர்

    அஃதாவது, இறைவனது ஞான நாடகத்தை எடுத்தோதித் திருவருள் ஞானம் வேண்டி விண்ணப்பித்தல்.

    இதன்கண், வள்ளற்பெருமான் தமது வாழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகளால் மனச் சஞ்சலமுற்று, அவற்றால் மனங் கலங்கி, உறவாய் நின்ற துன்பம் துடைக்க உறுதுணை யாவாரின்மை யுணர்ந்து, துயர் நீக்கத்திற்குத் துணையாகாமல் அது மிகுதற்குரிய பந்தங்கள் வாழ்க்கையில் மிகுவது கண்டு மனநோயுறுகின்றார். இந் நோய்க்கு மருந்தாவது திருவருள் ஞானமல்லது பிறிதில்லை எனத் தெளிந்து, அந்த ஞானப் பேற்றிற்குத் தடையாவது தமது அன்பின் சிறுமை யென்றறிந்து, அதனை இடையறா நினைவால் பெருகுவித்துப் பல்வகை நற்பணிகளால் முறுகுவிக்கின்றார். மண்ணக வாழ்வின் குறிக்கோள் அருள்ஞான வாழ்வைப் பெறுவதாதலின், அதற்காக அத்துறையில் முயல்கின்ற தனக்குத் திருவருள் ஞானத்தைத் தடையின்றி வழங்குக என வேண்டுகிறார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1171.

     மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
          வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
     எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
          இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
     தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
          தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
     நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      உள்ளத்தில் அச்சமில்லாத நன்மக்கள் பரவும் திருவொற்றியூரை யுடைய பெருமானே, ஞான நாடகம் செய்பவரே, பருகுதற்குரிய நீரையுடைய பழைய கிணற்றில் கால் வழுக்கி வீழ்ந்த ஒருவனை, அவனுக்கு வருத்த முண்டாகாதபடி எடுப்பவரைப் போலத் தூக்கி இடையில் கைவிட் டொழிவது இரக்கப் பண்புடையவர்க்கு முறையாகாதாகத், துன்பத்தில் வீழ்ந்து தவிக்கின்ற என்னைத் தடுத்துக் காவாது அதன்கண் ஆழ்ந்து கெட விடுதல் உமக்கு அறமாகாது. எ.று.

     உள்ளத்தின்கண் அசைவு தோன்றிய விடத்து நினைவுகள் தெளிவுறாமையின், தெளிந்த சிந்தைத் திருவுடைப் பெருமக்களை, “நடுக்கிலார்” என்றும், அவர் சிந்தைக்கண் இறைவன் தேனூற நிற்றலால், இடையறாது தொழுவது பற்றி, “நடுக்கிலார் தொழும் ஒற்றியூர்” என்றும் கூறுகின்றார். அவரது தூய மனத்தின்கண் இறைவனது ஞான நாடகம் நிகழ்தலின், “ஞான நாடகம் நவிற்று கின்றீரே” என்று கூறுகின்றார். பாழ்ங் கிணறாயினும், அருந்தும் நீருடைமை பற்றி, அதனைப் பருகச் சென்றவன் வழுக்கி வீழ்ந்தான் என்றற்கு, “மடுக்கும் நீருடைப் பாழ்ங் கிணறதனுள் வழுக்கி வீழ்ந்தவன்” என்றும், பாழ்ங்கிணறாதலின் இறங்கியபடி வலியின்றிக் கெட்டமை புலப்பட, “வழுக்கி வீழ்ந்தான்” எனவும் கூறுகின்றார். பாழ்க் கிணறு எனற் பாலது, பாழ்ங்கிணறு என மெலிந்தது. “பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே” (புள்ளி) என்பது தொல்காப்பியம். பாழ்த்தகிணறு சிறிது இடிபடினும், உள்வீழ்ந்தவனுக்கு ஊறு செய்யுமாதலின், “வருந்துறா வண்ணம் எடுக்கின்றார் என” என்று புகல்கின்றார். எடுக்கின்றார் போன்று எடாது கைவிடுதல் இரக்கமுடைய உள்ளத்தார்க்கு இயலாத செயலாதலின், “எடுக்கின்றோர் என இடையிற் கைவிடுதல் இரக்கமுள்ளவர்க் கியல்பன்று” என்கிறார். கண்டீர், முன்னிலையசை, சஞ்சலம் - துன்பம். சஞ்சல வாழ்வு பாழ்ங் கிணற்றில் வீழ்ந்து பரிதவிப்பது போன்றதாகலின், அத்துன்ப வாழ்வு உடையார்க்கு ஆதரவு செய்தல், துன்பத்தைத் தடுப்பதாய் முடியுமாகலின், அது செய்யாது துன்பத்திலேயே ஆழ்ந்து கிடந்து வருந்தச் செய்வது அறமாகா தென்பார், “தாழ்த்துகின்றது தருமமன் றுமக்கு” எனச் சாற்றுகின்றார்.

     இதனால், சஞ்சல வாழ்விற் கிடந்து வருந்தும் தமக்குத் திருவருள் ஞானம் நல்கி யருளுமாறு விண்ணப்பித்தவாறாம்.

     (1)