1172.

     வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
          விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
     உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
          உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
     கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
          கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
     நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      அருகிலுள்ள திருவொற்றியூரை யுடையவரே, திருச்சிற்றம்பலத்தில் ஞான நாடகம் புரியும் பெருமானே, வெளிற்றறிவை யுடையனாதலால் மெய்ம்மையாவது இன்னதென அறியேனாயினும் விமலனாகிய நின்பால் ஆர்வமுடையவனாவேன்; இஃது உண்மை; வஞ்சம் நிறைந்த உலக வாழ்க்கையாகிய கடலில் வீழ்வேனாயின் மீண்டு கரையேறும் துறையொன்றும் தெரியேன்; கண்ணாற் காணும் தன்மை யுள்ளவர், பாழ்த்த குழிக்குள் ஒருவர் வீழ்வதைக் கண்டால் பார்த்துக் கொண்டிருப்பது படித்த அவர்க்கு அழகாகுமோ? ஆகா தன்றோ! எ.று.

நணிமை, நண்மையென வந்தது; அணிமை அண்மை யென வருதல் போல. உடலொடு கூடி உலகியல் வாழ்க்கைக்கு உரியவற்றை நாடுதலும், நாடியவற்றைத் தேடி யுணர்தலும் ஊன நாடகம் எனவும், திருவருளை நாடி ஞானம் பெற்று இன்புறுதலை “ஞான நாடகம்” எனவும் கூறுதலின், நல்லறிவு நற்செயலுடைய நல்லுயிரின் பொருட்டு அம்பலத்தாடுகின்றமை விளங்கத் “திருச்சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே” என வுரைக்கின்றார். விமலன் - தூயவன். வெண்மை - புல்லறிவு. ஞான வாழ்வுக்குரிய மெய்ம்மை யுணர மாட்டாமைக்கு ஏது, தமது அறிவின் வெண்மையென்பது தோன்றற்கு, “வெண்மை நெஞ்சினேன் மெய் என்பதறியேன்” எனவும், அதனால் தமது நெஞ்சின்கண் உண்டாகிய அன்பு சிற்றளவினது என்றற்கு, “நும்மிடை வேட்கையும் உடையேன்” எனவும், தாம் நடத்தும் ஊன வாழ்வில் வஞ்சகமே பெருகியிருப்பது விளங்க, “வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்ந்துளேன்” எனவும், தம்மை அதனின்றும் தடுத்து ஆட்கொண்டாலன்றி உய்திபெறும் அறிவிழந்து வருந்துவேன் என்பார், “உவரி வீழ்வனேல் உறுதி மற்றறியேன்” எனவும், தாம் கூறுவது பொய்யுரையன்று உண்மை யுரையென்பார், “உண்மை ஓதினேன்” எனவும் உரைக்கின்றார். கண்மை-கண்ணுடைமை; அஃதாவது காணுந் தன்மை; கண்ணோட்டமுமாம். பாழ்ங்குழியில் ஒருவர் வீழக் காண்பவர் கற்றவராயின் வீழாவாறு தடுத்து உய்யத் துணை செய்வரே யன்றிக் கண்டு கொண்டிரார்; இருத்தலும் கல்வியறிவிற்குப் பொருந்தாமை புலப்படப் “பாழ்ங்குழி வீழக் கண்டிருப்பது கற்றவர்க் கழகோ” என்கின்றார். எல்லாம் செயல் வன்மையும் எல்லா ஞான நன்மையும் உடைய உனக்கு இதனை உரைக்கவும் வேண்டுமோ என்பது கருத்து. “காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி, நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக் கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்” (திருவதிகை) எனத் திருநாவுக்கரசர் கூறுவது ஈண்டு நினைவுகூரத் தக்கது.

     இதனால், அருள் ஞான வாழ்வு தந்தருள்க என விண்ணப்பித்தவாறாம்.

     (2)