1173.

     குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
          கொடியன் என்பது குறிப்பல உமது
     பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
          பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
     உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
          உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
     நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      தூயவனே, நல்ல தவத்தையுடைய செல்வர்கள் வாழ்கின்ற திருவொற்றியூரை யுடையவனே, ஞான நாடகம் ஆடுகின்ற பெரிமகனே, யான் குற்றங்கள் மிகவும் செய்வேன் எனினும் என்னைக் கொடுமையுடைய னெனக் கொண்டு விலக்குவது தேவரீர் திருவுள்ளக் குறிப்பன்று; உம்முடைய பொற்குன்றம் போன்ற தோளில் அணிகின்ற திருநீற்றை யானும் பூசிக் கொள்கின்றேன், உமது திருவடிக்கண் உளதாகிய எனது அன்பு சிறிதாயினும் இவ்வகையால் எனக்கு உறுதி நல்க வல்லதாதலின், அதனை ஈவது உனக்குக் கடமை காண். எ.று.

     நற்றவத்தர் - திருவருட் பேற்றுக்குரிய நன்னினைவும் நல்லறிவும் நற்செயலுமுடைய நல்லோர். தவம் - அயரா நினைவும் செயலுமுடைய முயற்சி. பிறப்பியல்பால் குற்றங்கள் பல செய்யும் இயல்பினேனாதலால், என்னைப் புறக்கணித்தல் நேர்மை யாகாது என்றற்குக் “குற்றமே பல இயற்றினும் என்னைக் கொடியன் என்பது குறிப்பல” என மொழிகின்றார். பொற்றை - கற்குன்று. பெருமான் திருமேனி பொன்னிறமுடையதாகலின் பொற்குன்றெனப் பொருள் கூறப்பட்டது. சிவன்பால் உண்மையன்புடைமைக்குக் குறியாவது நீறணிதலாதலின், “நின் புயத் தொளிர் திருநீற்றைப் பூசுகின்றனன்” என்கின்றார். பொருள்களின் நிலையாமையும், இறைவனது நிலையுடைமையும், திருநீற்றுப் பூச்சு, காண்பார் கருத்தில் நினைவுறுத்தி அன்பு செய்வித்தலின், திருநீற்றுப் பூச்சு இங்கே விதந்து கூறப்படுகிறது. “சிவனவன் திரள் தோள் மேல் நீறு நின்றது கண்டனையாயினும் நெக்கிலை இக்காயம் நீறுகின்றிலை” (சதகம்) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. எல்லாப் பொருளிலும் கலந்து நிற்பினும், அப்பொருள்களால் பற்றப்படாத தூயவன் என்றற்கு “புனிதனே” என்று புகழ்கின்றார். சிவபெருமான் திருவடிக்கண் தமக்குற்ற அன்பு உரிமையோடு கேட்குமளவுக்குப் பெரிதன்று என்பார். “நும்மடிக்கண் உற்றதோர் அன்பு சிறிது” எனவும், எனினும் அந்த அளவில் அது உறுதி பயக்கும் உயர்வுடையது என்பாராய், “சிறிதன்பும் இவ்வகையால் உறுதி” அந்த அளவில் அது உறுதி எனவும், அதற்குரிய பயனாகிய திருவருள் ஞானத்தை நல்குவது கடமை யென்பார். “ஈவதிங்கு உமக்கொரு கடன்” எனவும் இயம்புகின்றார். சுட்டு வருவிக்கப்பட்டது. காண்-முன்னிலை யசை. அன்பு ஞானமாதலின்; அது சிறிதாயினும் ஞானம் நல்க வல்லது, “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்” (ஞானசம்) என்று சேக்கிழார் பெருமான் கூறுவது காண்க.

     இதனால், அன்பு சிறிதாயினும் அருட் பேற்றிற்குரிமை தெரிவித்தவாறு.

     (3)