1174. உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்
உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன்
கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்
காம வேட்கையில் கடலினும் பெரியேன்
வள்ள லேஉம தருள்பெறச் சிறிது
வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர்
நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
உரை: வள்ளற் பெருமானே, நட்புச் செய்தற்குரிய நல்லவர் வாழும் திருவொற்றியூரை யுடையவரே, ஞான நாடகம் ஆடும் பெருமானே, உலகத்தார் குற்றம் செய்தாரை நோக்கி, 'உள்ளத்து உண்மை யுரைத்தால் தண்டனை யில்லையாம்' என்று சொல்வார்; அந்தக் கொள்கையை மனத்தில் திண்ணமாகக் கொண்டு, உமது திருவடியறிய மறைத்துப் பொய் கூறுகின்றேனில்லை; காம விச்சையைக் கடலளவினும் பெரிதாகக் கொண்டுள்ளேனாயினும், உம்முடைய திருவருளைப் பெறல் வேண்டுமென்ற எண்ணம் மனத்திற் சிறது கொண்டிருக்கிறேன்; மயக்கம் நீங்க அருள் புரிதல் வேண்டும். எ.று.
நள்ளல் - நட்பு. நட்புச் செய்தற்குரிய குணஞ் செயலுடையவர்களை “நள்ளலுற்றவர்” என்று புகழ்கின்றார். உள்ளதோதுதல் - உண்மையுரைத்தல். தீது விளைப்பதுபோல் தோன்றினும் நன்மைப் பயனை விளைவித்தலின் உண்மை யோதுவதை வாய்மையறம் எனவும், அதனால் மனம் தூய்மை யெய்தும் எனவும் சான்றோர் வற்புறுத்துகின்றனர். அந்த நயங் கருதியே நற்குணமுடைய நல்லோர் “உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர்” என்று உரைக்கின்றார். உலகுள்ளோர் - உலகில் ஒளியுடன் திகழ்பவர், “உளன் என வரும் ஓர் ஒளி வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதுவே” (புறம். 309) என வருதல் காண்க. இந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டே, யான் எனது மனநிலையை யுரைக்கின்றேன் என்பார், “இந்த உறுதி கொண்டு அடியேன் கள்ளம் ஓதிலேன்” எனவும், மனத்துறையும் கள்ளத்தை இறைவனுக்கு மறைக்க முடியாதாகலின், உமது திருவடியறியக் கூறுகின்றேன் என்பார், “நும்மடி அறிய” எனத் தெளிவுறுத்துகின்றார். மிக்க காமத்தில் மிதக்கும் உள்ளம் உடையே னென்பார், “காம வேட்கையில் கடலினும் பெரியேன்” என்கின்றார். காம வேட்கைக்கு இடம் பெரிதளித்தமையின், இறைவன் திருவருள் நினைவுக்கு என் உள்ளத்தில் இடஞ் சிறிதாயிற்று என்பார், “வள்ளலே உமதருள் பெறச் சிறிது வைத்த சிந்தையேன்” எனவும் அதனால் எனக்குன் அருள் வரையாது வழங்குதல் வேண்டுமென்பார், “வள்ளலே” எனவும், அதனால் பெரிது படர்ந்து வருத்தும் காமமயக்கம் தீர்ந்தொழியும் என்பாராய், “மயக்கற அருள்வீர்” எனவும் தெரிவித்துக் கொள்கின்றார்.
இதனால், உள்ளத்து மயக்கந் தீர்தற் பொருட் அருள் ஞானம் வழங்குதல் வேண்டுமென முறையிட்டவாறாம். (4)
|