1175.

     அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
          ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
     பரந்த நீரிடை நின்றழு வானேல்
          பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
     கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
          கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
     நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      கரந்தைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த பெருமானே, நரந்த மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரை யுடையோனே, ஞான நாடகம் ஆடுகின்ற இறைவனே, துன்பம் நிறைந்த உள்ளத்தோடு வழிச்செல்வோன் ஒருவனை ஆற்று நீர்ப் பெருக்கு இழுத்துச்செல்ல, அதனை நீந்திச் செல்லமாட்டாமல் பரந்து செல்லும் பெருக்கினிடையே நின்று அழுவானாகின், அவன் பகைவராயிருந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாரோ? துயரவெள்ளத்தில் சிக்கித் துன்புற்று மனங் கலங்கும் என்னைக் கண்டும், தேவரீர் வாளா இருப்பது முறைமையாகுமோ? எ.று.

     செங்கரந்தை, கருங்கரந்தையென இருவகைப்படும் கரந்தையுள் சிவனுக்குரியது செங்கரந்தை மலராதலின், அதனை விதந்து, “கரந்தையம்சடை அண்ணல்” என உரைக்கின்றார். செங்கரந்தையைச் 'சிவக்கரந்தை' யெனவும், கருங்கரந்தையை 'விண்டு (விஷ்ணு) கரந்தை' எனவும் நாட்டவர் வழங்குகின்றனர். கருங்கரந்தை வயல்களில் படர்ந்து வளர்வது பற்றிச் சான்றோர், “காய்ந்த கரந்தை மாக்கொடி விளைவயல்” (பதிற்று. 40) எனவும், இருவகைக் கரந்தையும் நல்ல மணமுடையன என்பாராய், “நறும்பூங் கரந்தை நாகு முலை யன்ன” (புறம். 261) எனவும் கூறுவர். நரந்தம் - நாரத்த மரம்; இதன் மலரும் மணமுடையதாதலின், பழங்கால மகளிர் மாலை தொடுத்தணிந்தனர் என வுரைப்பர். “விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட நரந்தப் பல்காழ்க் கோதை” (புறம். 302) எனச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். இதன் மணமே கமழும் புல் வகையும் உண்டு; இதனை 'நரந்தைப் புல்' என்பர். இது கடற்கரைகளிலும் காணப்படுகிறது. அல்லல் மேன்மேல் அடர்ந்துவரும் எனபதற் கொப்ப, துன்ப உள்ளத்தோடு செல்லும் ஒருவனை ஆற்று வெள்ளம் பெருகிச் சூழ்ந்து கொள்ளக் கரையேறும் துணையின்றி வருந்திக் கையற்று அழுபவனை, “அரந்தையோ டொருவழிச் செல்வோன் தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட” எனவும், பெருகிவரும் பெருக்கை எதிர்த்துநின்று கண்ணீர் விட்டுக் கதறியழுவானேல், அதன்கண் போய் பயின்றவர் பகைமை உள்ளத்தவராயினும் பார்த்து வெறிதே கைகட்டி யிராரென்பது தோன்றப் “பரந்த நீரிடை நின்றழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்து நிற்பாரோ” எனவும் கூறுகின்றார். வெள்ள நீர் ஒருபால் இழுக்கக் காலடியில் மணல் கரைந்து நிலை கொள்ளாதவாறு அலைக்க வருந்தும் அவனது நிலையை “ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட” என்றும், இருகரையும் தொட்டுக்கொண்டு பெருகிவரும் வெள்ளம் என்றற்கு, “பரந்த நீர்” என்றும் பகர்கின்றார். பகைவராயிருப்பினும் மக்கட் பண்பு இறப்பதைப் பார்க்க விடாதாகலின், “பகைவராயினும் பார்த்திருப்பாரோ” என்று மொழிகின்றார். ஆற்றுப் பெருக்கினிடைப் பட்டு அவலக்கவலையுறும் அவனைப் போல், ஐம்புல ஆசையும், அழிபசித் துன்பமும், நில்லா வாழ்வும் செய்யும் பொல்லாங்காற் கலக்கமுறும் தமது மனநிலையைச் சுருங்கிய சொற்களால், “அடியேன் கலங்கக் கண்டிருப்பது கடனோ” என உரைக்கின்றார். இக் கருத்தையே, “புலனைந்தும் மயங்கி அகம் குழையப் பொரு வேலோன் நமன் தமர் தாம் நலிய அலமந்து மயங்கி அலர்வதன் முன் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே” (நெய் வாயில்) என்று சுந்தர மூரத்திகள் உரைப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது.

     இதனால், வாழ்வின் துன்ப மிகுதி கூறி விண்ணப்பித்தவாறாம்.

     (5)