1177. வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
உரை: அடைந்தாருடைய அல்லலைப் போக்கும் திருவொற்றியூரை யுடைய சிவனே, ஞான நாடகம் புரிகின்ற நாயகனே, அழையாமே ஒருவர் விருந்தினராக வந்தால், “ஏன் வந்தீர்” என்று வள்ளன்மையுடையோர் அவரை விலக்குவதில்லை. அதுபோலத் துன்புற்ற மனத்துடன் வாழ்வில் நிகழும் வஞ்சகச் செயல்களால் நிலை கலங்கித் தேவரீருடைய திருவருளாகிய அமுதத்தை மிகவும் உண்ண வேண்டி வருகின்றேன்; வருதற்கு முன்பே நிலைமையை மாற்றிவிடுவீராயின் என் செய்வேன்? நீவிர் பெருவள்ளல் அன்றோ? எ.று.
நலியல் - அல்லல். வலிய வந்திடும் விருந்தாவது, அழையாமே வரும் விருந்து, வண்கை யுள்ளவர் - கொடை மனமுடையவர். மற்று, அசை, கலிய நெஞ்சு - பெருகிய துன்பமுடைய நெஞ்சு. சொல்லும் செயலும் ஒவ்வாமை ஒழுகுதல் உலகியலிற் பெரும்பான்மையாதலின், “வஞ்சக வாழ்வு” என்கின்றார். கருணையை அமுது என்பதால், அதனைப் பெறவரும் தம்மை “உண்டிட வருகின்றேன்” என்கின்றார். மலிவு - மிகுதி. அன்புச் சூழ்நிலையை மாற்றி விட்டால் என் போலியர் எய்துதற் கிடமின்றொழியும் என்பார், “வருமுன் மாற்றுகிற்பிரேல்” எனவும், வள்ளன்மையுடையோர் அது செய்யார் என்பதற்கு, “வள்ளல் நீர் அன்றோ” எனவும் உரைக்கின்றார்.
இதனால், தடையின்றி அருள் வழங்கவேண்டுமென விண்ணப்பித்தவாறு. (7)
|