1178.

     பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்
          புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல்
     உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்
          ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன்
     ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்
          ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ
     நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      துன்ப மிகுதியால் மனத்தின்கண் உண்டாகும் மெலிவைப் போக்குதற்கு அருள் புரியும் திருவொற்றியூரையுடைய பெருமானே, ஞான நாடகம் புரிகின்ற சிவனே, ஐயனே, பொய்யே பேசுபவனாயிருந்தாலும் வேறு போக்கிடமில்லாத புலையனாகிய அடிமை, தன்னை ஆண்ட செல்வனுடைய புகழையே எடுத்துப் புகல்வனாயின், அவனை வெறுத்தொதுக்காமல் அவன் தன்பால் வைத்துக்கொள்வன்; இவ்வுலகில் இஃது உண்மை நிகழ்ச்சியாகும். ஒதிமரம் போல் உள்ள நான் உன் திருவடி நிழலைத் தவிர வேறு போக்கிடம் அறியேன். உம்முடைய திருவடிக்கு அடித் தொண்டு செய்வதே தொழிலாக உடையவன்; இயல்பாகவே என்னை அடிமையாகக் கொண்ட நீவிர் என்னைப் புறம் போக்குதல் அழகாகாது. எ.று.

     நையல் - துன்பத்தால் மெலிதல். வையக வாழ்வில் கீழ்நிலையில் உள்ளவர், மேன்மேலும் பொய்கூறுவதே இயல்பாகவே உடையராகி விடுகின்றாராதலின், காரணம் கூறாமல், “பொய்யன் ஆகிலும்” என்கின்றார். பொய்ம்மை மிகுதியால் போக்கிடம் இன்றி யொழிதலின் புலையனு மாகின்ற னென்பார், “போக்கிடம் அறியாப் புலையன்” என்கிறார். அவன் எக்காலும் பிறரால் ஆளப்படுவதே யின்றி வேறின்மையின் அவனது அடிமை நிலையை உய்த்துணர வைக்கின்றார். ஆண்டவன் - உணவும் உடையும் பிறவும் கொடுத்து ஆள்பவன், தலைவனாய் ஆள்பவன், அவனது பொய்ம்மையும் புலைத்தன்மையும் நோக்கி விலக்காமல் வைத்திருப்பதற்கு ஏது, தலைவனது புகழ் பாடித் திரிவதேயாகும். இதுபற்றியே, “ஆண்டவன் புகழ் உரைப்பானேல் உய்ய வைப்பன், இவ்வுலகில் ஈதுண்மை” என மொழிகின்றார். “கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம்” (நீதி நெறி. 10) என்பர் குமரகுருபரர். யானும் நினக்கு அடிமையாதலின், நின் திருவடியல்லது வேறு புகுமிட மில்லேன் என்பார், “ஒதியனேல் புகல் ஓரிடம் அறியேன்” எனவும், உன் திருவடிக்கே தொண்டு புரிகின்றேன்; என்னை அருளாது கைவிடுதல் நன்றாகாது என்று முறையிடுவாராய், “ஐய நும்மடிக்கு ஆட் செயலுடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ” எனவும் உரைக்கின்றார். உடம்பொடு கூடாது இருள் மலத்திற் பிணிப்புண்டு கிடந்த நிலையில் (கேவலத்தில்) உயிர்க்கு, உடல் கருவி உலகம் முதலியன கொடுத்து உலக வாழ்வு அளித்து மலப்பிணிப்பு நீக்கிக்கொள்ள அருளால் உதவியது ஆண்டமையாம். அது பற்றியே, வள்ளற்பெருமான், “ஆண்ட நீர்” எனப் புகல்கின்றார். “மண்ணகத்தே வாழச் செய்த” நீ வாழ்வு முடிவதற்குள் கைவாங்கிக் கொள்ளுதல் நலமாகாது என்பார், “எனை அகற்றுதல் அழகோ” என்கின்றார்.

     இதனால், வாழ்வளித்த நீ வாழச் செய்தல் வேண்டும் என விண்ணப்பித்தவாறாம்.

     (8)