1179.

     தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
          சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
     எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
          இருந்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
     பந்த மேலிட என்பரி தாபம்
          பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
     நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
          ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

உரை:

      ஆக்கம் தரும் ஒள்ளிய நன்செய் வயல்களையுடைய திருவொற்றியூரை யுடைய பெருமானே, ஞான நாடகம் ஆடுகின்ற சிவனே, பெற்ற தந்தையானவர் தாம் பெற்ற மக்களைக் கெடுக்க நினைப்பார் என்பது உலகில் எங்கும் சிறிதும் இல்லை; எந்தையாகிய நீர் வஞ்சகம் நிறைந்த உலக வாழ்விலிருந்து கெடுமாறு செய்கின்றீ ரென்றால், இதனை யார்க்கு உரைப்பேன்? அருளொழுகும் தாமரை போன்ற கண்களையுடைய பெருமானே, அன்பு கூர்ந்து என் துன்பத்தைப் பார்த்தருள்வீரோ? எ.று.

     தம் மக்கள் தம்மினும் மிக்குயர்ந்து வாழ்தல் வேண்டுமென்பதுதான் தந்தையரது விருப்பமும் கடனுமாதலால், அவர்களைக் கெடுக்க நினைப்பது நடவாத செயல் என்பது நாடறிந்த உண்மையாதலின், “தந்தையாயவர் தனையரைக் கெடுக்கச் சமைவர் என்பது சற்றும் இன்று உலகில்” என்றுரைக்கின்றார். “தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மண்ணுயிர்க் கெல்லாம் இனிது” எனத் திருவள்ளுவரும், “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்) எனச் சங்கச் சான்றோரும் உரைப்பது காண்க. அது செய்தல் கூடாது என்பது புலப்படவே “எந்தை” என்று குறிக்கின்றார். தனயரானவர் தவறு செய்து கெடக் காண்பரேல் பொறாது விரைந்து அவரை அக்கேட்டினின்றும் எடுக்கத்தாம் தந்தையர் முயல்வர். அற்றாக, என்னை வஞ்சகம் முதலிய தீநெறியிற் செலுத்திக் கெடச்செய்வது பொருத்தமன்று என்றற்கு, “எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கிது புகல்வேன்” என்று இயம்புகின்றார். வஞ்சக வாழ்வு இன்பமாய்த் தோன்றி வாழ்வாரை இறுகப் பிணித்துக் கொள்ளுதலின், துன்பம் மிகுகிறது என்றற்குப் “பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ” என்றும், அருள் ஒழுகும் கண்களையுடைய அண்ணலாகிய உமக்கு இஃது ஆகாது என்பார், “அருட் பங்கய விழியீர்” என்றும் இசைக்கின்றார். நந்த ஒண்பணை - விளைவால் ஆக்கம் பெருக்குகின்ற நன்செய் வயல். நந்தம் - ஆக்கம்; “நத்தம் போற் கேடும்” (குறள்) என்றாற் போல.

     இதனால், வாழ்க்கைப் பந்தத்தால் எய்தும் துன்பத்தினின்றும் நீக்கியருளல் வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (9)