118.

    உளம்தளர விழிசுருக்கும் வஞ்சர்பாற் சென்
        றுத்தம நின்னடியை மறந் தோயாவெய்யில்
    இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
        ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
    வளந்தரு சற்குண மலையே முக்கட் சோதி
        மணியினிருந் தொளிரொளியே மயிலூர் மன்னே
    தளந்தருபூம் பொழிற் றணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     இதழ்கள் பொருந்திய பூம்பொழில்களை யுடைய தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்குங் நிறைந்தருளும் சகச வாழ்வே, வளமிக்க நிலைத்த நற்குணக் குன்றமே, மூன்று கண்களையுடைய ஒளிமிக்க மாணிக்க மணியாகிய சிவமணியின்கண் இருந்தொளிரும் ஒளியாகிய முருகப் பெருமானே, மயிலேறும் மன்னவனே, கண்டார் மனம் தளர்ச்சியடையுமாறு கட்பார்வையைச் சுருக்கிக் கொள்ளும் வஞ்சகரிடம் அடைந்து உத்தமனாகிய நினது திருவடியை மறந்து குறையாத வெயிலிற் பட்ட இளந்தளிர் போல மெலிந்து இரந்துண்டு வருந்தும் இந்த ஏழையாகிய என் முகத்தைப் பார்த்து இரக்கம் புரிகின்றாயில்லை; இதனை என்னென்பது, எ. று.

     பூக்கட்கு அழகும் வனப்பும் தருவது இதழாதலால், அதனைச் சிறப்பித்துத் “தளம் தரு பூம்பொழில்” என்று கூறுகிறார். தளம்-பூவிதழ். சத்குணம், சற்குணமாயிற்று. குணமும் காலந்தோறு மாறுவதாகையால், நிலைத்த மெய்ம்மைக் குணங்களின் உருவமாய் இலகுவது தோன்ற “வளந்தரு சற்குண மலையே” என முருகப் பெருமானை மொழிகின்றார். சத்து-நிலைபேறு; மெய்ம்மையுமாம். முக்கண்ணும் ஒளிமிக்க மாணிக்க மணியின் நிறம் பொருந்திய மேனியு முடையனாதலாற் சிவனை, “முக்கட் சோதிமணி” எனவும், அம்மணியின் சிவந்த ஒளிப்பிழம்பு முருகன் திருமேனியாவது பற்றி, “மணியின் இருந்தொளிர் ஒளியே” எனவும் இயம்புகிறார். வஞ்சிக்கப் பட்டவரைக் கண்டால் வஞ்சம் புறத்தே தெரிந்து விடுமெனக் கண் விழியைச் சுருக்கி நோக்குவது கொண்டு “விழி சுருக்கும் வஞ்சர்” என்றும், சுருக்கம் வஞ்சிக்கப் பட்டார் மனத்தைப் புண்படுத்தி வருத்துவது இயல்பாதலால், “உளம் தளரவிழி சுருக்கும் வஞ்சர்” என்றும் கூறுகின்றார். வஞ்சர்பால் சென்று அவர் செய்யும் வஞ்சனைகட்கு இரையாகி மன நோயுற்று நினைவிழந்து வருந்தின போது முருகன் திருவடியை நினைத்தற்கு இடமின்றி மறந்தமையை எண்ணி வருந்துகின்றாராதலால் வள்ளற் பெருமான், “உத்தம நின் அடியை மறந்து” என்றும், வருந்திய போதுற்ற மேனி மெலிவை, “ஓயா வெய்யில் இளந்தளிர் போல் நலிந்து” என்றும், வேண்டிய தொன்றிற் காகப் பன்முறையும் பிறர்பால் சென்று இரந்து திரிந்தமை தோன்ற, “இரந்து இங்கு உழலும் இந்த ஏழை” எனத் தம்மைச் சுட்டியும் உரைக்கின்றார். ஓய்தல்-குறைதல். ஓயா வெயில்-கடும் வெய்யில். பார்த்தவிடத்து இரக்கம் தடையின்றி யுளதாம் என்றற்கு, “ஏழை முகம் பார்த் திரங்காய்” எனக் கூறுகிறார். உம்மை தொக்கது. எப்பொருட்கும் கண்ணாய் நின்று காட்டியும் கண்டும் அருளுபவனாகிய நீ என் முகம் கண்டும் இரக்கம் கொள்கிலையே, இதற்கு என் செய்வேன் எனக் கையறவு படுகிறாராதலால், “என்னே என்னே” என்கின்றார்.

     இதன்கண், ஏழையாகிய என் முகம் பார்த்தும் இரங்குகின்றாயில்லையே என் செய்வேன் எனக் கையறவு படுமாறு காணலாம்.

     (16)