56. கொடி விண்ணப்பம்

திருவொற்றியூர்

    இவ் விண்ணப்பம் பாட்டுத்தோறும் ஈற்றடியின் இறுதி 'தூய மால்விடைத் துவசத்தினீரே' என்று முடிவதால் இப்பெயர் பெறுவதாயிற்று. துவசம் - கொடி. விடைத்துவசம் - விடையுருவம் எழுதிய கொடி.

    இது பெயர்வகையாற் கொடி விண்ணப்பமாயினும் பொருள் வகையில் தொண்டு விண்ணப்பமாகும். இதன்கண் வள்ளற்பெருமான் நம்பியாரூரரை ஓலை காட்டித் தொண்டனாக்கிக் கொண்டதுபோல எனக்கொன்றும் ஓலை வேண்டா; தொண்ட னென்றுரைத்தாலே போதும் எனவும், யான் வேண்டுவதெல்லாம் சிவனுக்குத் தொண்டனென்று கொள்ளப்படுவதேயாம் எனவும், தொண்டனாயின் எப் பணியையும் தலையாற் செய்வேனெனவும், என்னைத் தொண்டனெனக் கடைக்கண்ணால் அருள் செய்யின் யான் உய்தி பெறுவேன் எனவும், புதியன் முதியன் என என்னை இகழ்ந்து போக்க வேண்டா வெனவும், காணபார் பின்பற்று மளவுக்குத் தொண்டனாகு மெனக்குப் பண்பும் செயலும் உண்டெனவும், மனைதோறும் பலியிரந் துண்ணும் பித்தன் எனச் சிவனைப் பழிக்கினும் அவற்குத் தொண்டனாதலிலே எனக்குப் பெருவிருப்பமெனவும், என்னை அடிமை கொண்டு நஞ்சு தந்து உண்க எனினும் ஆணை யெனக்கொண்டு உண்குவேன் எனவும், தொண்டரினத்துள் அணுக்கத் தொண்டரிற் சேர்க்காமல் புறத்தொண்டனாக இரு எனினும் நன்று; ஆனால் தொண்டனெனக் கொள்ளா தொழியின், நான் தூக்கிட்டுக்கொண்டு உலகவர் இறைவனாகிய உன்னைப் பழித்துரைக்கப் பண்ணுவேன் எனவும் இயம்புகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1182.

     மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான்
          மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே
     ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம்
          உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
     வேலை ஒன்றல மிகப்பல எனினும்
          வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
     சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
          தூய மால்விடைத் துவசத்தி னீரே.

உரை:

      சோலைகள் பொருந்திய அழகிய ஒற்றியூர்ப் பெருமானே, தூய பெரிய விடை எழுதிய கொடியை உடையவரே, மாலையணிந்த தோளையுடைய சுந்தரராகிய பெருமகனது திருமணத்திற்குச் சென்று அவ்விடத்தே வழக்குத் தொடுத்ததுபோல ஆவண வோலையொன்றும் நீர் காட்ட வேண்டியதில்லை; மனமுவந்து, என்னை, 'நீ எனக்குத் தொண்டன்' என்று சொல்லுவீராயின், இடப்படும் வேலை ஒன்றல்ல மிகப்பல என்றாலும் உள்ளத்தே வெறுப்பின்றி மகிழ்வுடன் செய்வேன். எ.று.

     மணமாலை தோளில் விளங்க மணப்பந்தரிலிருந்த சுந்தரரை வந்திருந்தோர் காண ஆவணம் காட்டி அடிமையெனச் சொல்லி வழக்கிட்ட வரலாற்றை நினைந்து கூறலின், “மாலை யொன்று தோள் சுந்தரப் பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்ட தெனவே” என்று உரைக்கின்றார். “வெண்ணெய் நல்லூரில் அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனாய் என்னை ஆளது கொண்ட நற்பதத்தை” (நள்ளாறு) எனவும், “அன்று வந்தெனை அகலிடத்தவர் முன் ஆளதாக வென்றாவணம் காட்டி நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத்திரள் தொத்தினை” (கோலக்கா) எனவும், சுந்தரப் பெருமானே சொல்லுவது காண்க. சுந்தரரை ஆளாகக் கோடற்கு ஆவணவோலை காட்டியதுபோல எனக்கு ஒன்றும் சான்றுகாட்ட வேண்டுமாறில்லை; யான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்பார், “ஓலை ஒன்றும் நீர் காட்டுதல் வேண்டா” என்றும், “நீ எனக்குந் தொண்டன்” என்று என்னைச் சொன்னாலே போதுவதாம் என்பார், “உவந்து தொண்டனென்று என்னை உரைப்பிரேல்” என்றும் இயம்புகின்றார். தொண்டனென்று ஏன்றுகொள்ளற்குத் தம்பாலுள்ள தகுதியைக் கூறுவார், “வேலை ஒன்றல மிகப்பல வெனினும் வெறுப்பிலாது உளம் வியந்து செய்குவான் காண்” என்று கூறுகிறார். எத்துணையுண்மைத் தொண்டராயினும் வேலை மிகப்பல தரின் மனம் அழுங்குவர்; ஆனால் யான் மகிழ்ந்து செய்வேன் என்பார், “வெறுப்பிலாது உளம் வியந்து செய்குவன்” என்று இசைக்கின்றார்

.      இதனால், தன்னைத் தொண்டன் என்று ஏன்றுகொளல் வேண்டுமெனத் தொண்டனாதலில் தமக்குள்ள விருப்பு மிகுதியை வள்ளற் பெருமான் தெரிவிக்கின்றார்.

     (1)