1183. பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
என்று கொள்விரேல் எனக்கது சாலும்
சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: மாமரம் செறிந்த பொழில்களையுடைய திருவொற்றியூரையுடைவரே, தூய பெரிய விடை யெழுதிய கொடியை உயர்த்தவரே, நீர் பூதப்படையை யுடையராதல் கண்டும் சிறிதும் அஞ்சேன்; புதிய பாம்புகளைப் பூணாரமாக அணிந்து கொண்டாலும் அஞ்சேன்; வலம் இடமென்ற வேற்றுமையின்றித் தூக்கி யாடும் பெருமை சான்ற சேவடியைப் பிடிக்கப் பணிக்கினும் மனம் தளரேன்; தவறொன்றும் உள்ளத்திற் கொள்ளாமல் என்னையும் தொண்டனென்று ஏன்று கொள்வீராயின் எனக்கு அஃது ஒன்றே அமையும். எ.று.
சிவனைச் சூழ வுள்ளது கண்டார் அஞ்சும் பூதப் படையாதலால், “பூதம் நும்படை யெனினும் நான் அஞ்சேன்” என்று கூறுகிறார். “பூதப்படையுடையார் பொங்கு நூலார்” (பந்தணை) என்பர் திருநாவுக்கரசர். பழகிய பாம்பு அச்சம் தோற்றுவியாதலால், “புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன்” என்று புகல்கின்றார். “ஆரம் பாம்பாவ தறிந்தோ மேல் நாமிவர்க் காட்படோமே” (வேள்விக்) என நம்பியாரூரர் கூறுவது காண்க. பொன்னம்பலத்திலும் வெள்ளியம்பலத்திலும் தனித்தனியே இரு கால்களையும் மாறித் தூக்கி யாடுவதால் “பேதமின்றி அம்பலந்தனில் நடிக்கும் பெருமைச் சேவடி” என்றும், கால் பிடிப்பது குறையென்று கருதேன் என்பார், “சேவடி பிடிக்கவும் தளரேன்” என்றும் உரைக்கின்றார். ஏனை அடியார்களின் சிறப்பு என்னிடம் இல்லாமை பற்றி என்னைத் தொழும்பனாக்குதல் குற்றமாகத் தோன்றினும், அதனை நெஞ்சிற் கொள்ளலாகாது எனவும், என்பால் அடியனாகாமைக்குரிய குற்றமிருப்பினும் அதனைத் திருவுள்ளத்திற் கொள்ளலாகாது எனவும் பொருள் படுமாறு, “ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பனென்று கொள்விரேல்” என்றும், தொழும்பன் என்னும் அஃது ஒன்றே எனக்கு அமைவதாம் என்பார், “எனக்கு அது சாலும்” என்றும் இயம்புகிறார்.
இதனால், சிவனுக்குத் தொண்டன் என்று கொள்ளப்படுவதொன்றே நான் வேண்டுவ தென்பதாம். (2)
|