1184. உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன்
உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர்
செப்பி டாமுனம் தலையினால் நடந்து
செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள்
தப்பி டாததில் தப்பிருந் தென்னைத்
தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன்
துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: திருவொற்றியூரை யுடைய பெருமானே, தூய பெரிய விடையெழுதிய கொடியை யுடையவரே, என்னை அடியனாகக் கொண்டு உப்பில்லாத கூழை யளித்தாலும் அதனை மறாமல் உவந்து உண்பேன்; ஒரு வேலையைத் தந்து இதனை அறிவால் அறிந்து செய்க என நீர் சொல்லவேண்டாமலே தலையால் நடந்து செய்து முடிக்க வல்லவன்; யான் செய்யும் வேலை தவறு படாது; தவறு தோன்றக் கண்டு என்னைத் தண்டிப்பீராயின், அதனால் சலிப்புற்று மனம் வருந்தேன்; புறக்கணிக்காமல் எனக்கு அருள் செய்க. எ.று.
வேலை செய்யும் பணியாளருக்குக் காலத்தில் உணவளித்தல் முறையாதல் பற்றி, எனக்கு உப்பில்லாத கூழை அளித்தாலும், அக்குறை பற்றி மறுக்காமல் உவந்து உண்பேன் என்பார், “உப்பில்லாத கூழ் இடுகினும் உவந்து உண்பேன்” என்று கூறுகிறார். இடுகிற வேலை அரியதாயின் கருத்துடன் செய்க என்று வேலை கொடுப்போர் சொல்வது வழக்கமாதலின், “இவ் வேலையை உணர்ந்து செய்யென நீர் செப்பிடா முனம்” என்றும், யானே தரப்படும் வேலையின் அருமையை யுணர்ந்து அறிவைச் செலுத்தி இனிது செய்து முடிப்பேன் என்பார், “தலையினால் நடந்து செய்ய வல்லன் யான்” என்றும் உரைக்கின்றார். தலையால் நடத்தல் என்பது ஈண்டுப் பெரிதும் முயன்று செய்தல் மேற்று. செருக்கித் திரிவதையும் தலையால் நடத்தல் என்பர்; “தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேன்” (நீத்தல்) என மணிவாசகர் வழங்குவ தறிக. தலையினாற் பணிந்து எனற்பாலது ஏடெழுதினோரால் “தலையினால் நடந்து” என்று திரிக்கப்பட்டதென நினைத்தற் கிடமுண்டு. செயல் வன்மையை எடுத்துரைக்கும் உரிமை வேலை செய்வார்க்குண்மை பற்றிச் “செய்ய வல்லன்” எனவுரைக்கின்றார். பன்மைக்கண் ஒருமை மயங்கிற்று. இருந்தென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. தப்புச் செய்தவர் தண்டிக்கப்படுவது முறையாதலால் அதுபற்றி வருந்துவது அறிவுடைமை யன்மையின் “சலித்துளம் வெருவேன்” என்றும், யான் சொல்வது கேட்டு என்னைப் புறக்கணித்தல் கூடா தென்பார், “துப்பிடாது எனக்கு அருள்” என்றும் சொல்லுகின்றார்.
இதனால், தம்மைத் தொண்டு கொள்வதில் உள்ள நயப்பாடு கூறியவாறு. (3)
|