1185. கூலி என்பதோர் அணுத்துணை யேனும்
குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன்
மாலி னோடயன் முதலியர்க் கேவல்
மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே
ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண்
அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர்
சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: சூலப்படை யேந்தும் தேவியை ஒருபாகத்தே கொண்டு மகிழும் ஒற்றியூர்ப் பெருமானே, தூய பெரிய விடையெழுதிய கொடியை யுடையவரே, என்னை ஆளாக ஏற்றுக் கொள்வீராயின் செய்பணிக்குக் கூலியாக ஒன்றும் ஓர் அணுவளவும் கேட்க மாட்டேன்; கூலி யென வொன்று கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டேன்; திருமாலும்பிரமனும் ஆகிய தேவர்கட்கு மறந்தும் ஏவலனாக மாட்டேன்; நிலைத்த உயிர்களாகிய பயிர்கள் வளம் பெறுதற்குப் பெய்யும் கோடை மழை போன்றதான தேவரீருடைய கடைக்கண் சொரியும் அருள் ஒன்றையே வேண்டுகிறேன்; ஆகவே என்னை அடிமை கொண்டு அருள்க. எ.று.
உமாதேவி துர்க்கை வடிவில் சூலப்படை யேந்துதலால், “சூலி” என்றும், அவள் பங்கினனாதலால் “ஒரு புடைமகிழ ஒற்றி யுடையீர்” என்றும் கூறுகிறார். ஒற்றியூர் ஆலயத்தில் துர்க்கையும் ஒருபால் எழுந்தருள்வது பற்றி “சூலி ஓர்புடை மகிழ் ஒற்றி யுடையீர்” என்கின்றார் என்றுமாம். ஒரு காலத்தே அத்துர்க்கைக்கு எருமைகள் பலியிடப் பட்டதாகவும் கூறுவர். ஆளாகக் கொண்டவிடத்துக் கூலி யாது தருவதென்றொரு வினா எழுதலின், அதனைத் தாமே நினைவிற் கொண்டு, “கூலி யென்பதோர் அணுத்துணை யேனும் குறித்திலே” னென்றும், ஆளாயினார்க்குக் கூலி கொடுப்பது முறையாதல் எண்ணி யாதேனும் கொடுக்கலுறின் அதனை யான் வாங்கேன் என்பார், “அது கொடுக்கினும் கொள்ளேன்” என்றும் இயம்புகின்றார். கூலி பெறாத ஆளாயின், அவன் எங்கும் எவர்க்கும் ஆளாவான் என்று நினைக்கப் படுதலால், அதனை மாற்றல் வேண்டி, “மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன்” எனவும், யாதும் வேண்டாத ஆள் உலகத்தில்லையே யெனில், யான் வேண்டுவது நின்னுடைய கடைக்கண் அருளொன்றே யாதலின் என்னை ஆளாகக் கொண்டருள்க என்பாராய், “மன்னுயிர்ப் பயிர்க்கே ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமை கொள்கிற்பீர்” எனவும் உரைக்கின்றார். உடம்பு போலாது உயிர் அழிவில்லாதாகலின் “மன்னுயிர்” என்றும், பயிர்கள் வளம் பெறற்குக் குளிர்மழை போல உயிர்கள் ஞான வளம் பெறற்குத் திருவருள் இன்றியமையா தென்பார், “உயிர்ப் பயிர்க்கு ஆலி யன்னதாம் கடைக்கண் அருள்” என்றும் கூறுகின்றார். வானத்தே மிகக் குளிர்ந்து பனிக் கல்லாகி முன்னர்ச் சொரிந்து பின்னர்க் காற்று மழையாகும் கடைப் பெருமழையை “ஆலி” என்கின்றார். ஆலியை ஆலங்கட்டி என்பர். கல்மழை என்றலும் உண்டு.
இதனால், அருளே வேண்டும் என்னை அடிமை கொள்க என விண்ணப்பித்தவாறாம். (4)
|