1186.

     தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
          தேவர் இல்லைஅத் தெளிவு கொண்டடியேன்
     ஆர்ந்து நும்அடிக் கடுமைசெய் திடப்பேர்
          ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
     ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
          உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
     சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
          தூய மால்விடைத் துவசத்தி னீரே.

உரை:

      புகழ் தேடுவதில் சோர்வு படாதவர் வாழும் திருவொற்றியூரையுடைய பெருமானே, தூய பெரிய விடை யெழுதிய கொடியை யுயர்த்த சிவபரம்பொருளே, எங்கே தேடினும் தேவரீரைப் போலத் தலையாய தேவர் இல்லையெனத் தெளிந்தேன்; அத் தெளிவினால் மன நிறைவு கொண்டு உம்முடைய திருவடிக்கு அடிமை செய்யப் பேராசை யுற்றுத் தேவரீரை அடுத்துள்ளேன்; என் மன விருப்பத்தைக் கண்டறிந்து என்னை அடிமை கொள்ளாதொழிவீராயின் யான் உய்தியில்லாதவனாவேன்; இதனை நுமது திருவடி யாணையாக அறிக. எ.று.

     சோர்தல் - மறுத்தல். புகழீட்டுவார்க்கு மறதி பெருந்தடையாதலால், “சோர்ந்திடார் புகழ் ஒற்றியூருடையீர்” என்று சொல்லுகிறார். தேவர்கள் பலரையும் பற்றிப் புராணங்கள் பலவும் கூறுதலால் அவற்றை ஆராய்ந்து தெளிந்தமை விளங்கத் “தேர்ந்து தேடினும்” என்றும், தேவர் பலருள்ளும் தலையாய தேவர் சிவபிரான் என்பது தெளிந்தமையின், “தேவரீர் போல் தலைமைத் தேவர் இல்லை” என்றும், அந்தத் தெளிவுணர்வால் சிவபெருமான் திருவடிக்கே தொண்டனாய்ப் பணி புரிய வேண்டும் என்ற ஆர்வம் மீதூர்ந்து அடைந்தமை விளக்குதற்கு “அத்தெளிவு கொண்டு அடியேன் ஆர்ந்து நும்மடிக்கு அடிமை செய்திடப் பேராசை வைத்து உமை அடுத்தனன் அடிகேள்” என்றும் இயம்புகிறார். ஆர்தல்- நிறைதல். அடிகள் என்பது அடிகேள் என விளியேற்றது, புறனடையாற் கொள்க. எதனையும் நன்கு ஓர்ந்தல்லது பெரியோர் செய்தலின்மையின், “இங்கு ஓர்ந்து என்னைத் தொழும்பு கொள்க” எனவும், என் போன்றோர் உய்தி பெறுதற்குத் தொண்டு செய்தலின்றிச் செயல் வேறில்லாமையால், “தொழும்பு கொள்ளீரேல் உய்கிலேன்” எனவும், இதனை உம்முடைய திருவடி ஆணையாகச் சொல்லுகிறேன் என்பாராய், “இஃது உம் பதம் காண்க” எனவும் ஓதுகின்றார்.

     இதனால், சிவபெருமானுக்குத் தொண்டுபட்டுப் பணிசெய்தலின் வேறு உய்தி தருவதில்லை என விளக்கியவாறாம்.

     (5)