1187. புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர்
பூரு வத்தினும் பொன்னடிக் கடிமை
பதிய வைத்தனன் ஆயினும் அந்தப்
பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே
முதியன் அல்லல்யான் எப்பணி விடையும்
முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: துதிக்கப்படும் பெருமை மிக்க ஒற்றியூரை யுடைய பெருமானே, தூய பெரிய விடையெழுதிய கொடியை யுயர்த்தவரே, புதியவனென்று தேவரீராகிய நீவிர் என்னைப் போக்குதல் வேண்டா; முன்னை நாட்களிலும் யான் உமது பொன்னடிக்கு அடிமை பூண்டிருந்தவன்; ஆயினும் அந்தப் பழங்கணக்கை இப்பொழுது பார்ப்பதில் என்ன பயன்? மேலும், இப்பிறப்பிலும் இப்பொழுதும் முதுமை யுடையவனல்லன்; எத்தகைய பணியைக் கொடுத்தாலும் முயன்று செய்து முடிப்பேன்; கொண்டது விடாத மூர்க்கத் தன்மையுடையவனுமல்லன். எ.று.
பெருமையுடையதைப் பாராட்டுவதைத் துதியென்பது மரபாதலால், பாராட்டுடைய திருவொற்றியூரை “துதிய தோங்கிய ஒற்றியூர்” என உரைக்கின்றார். “ஊர் தானாவது உலகேழுடையார்க்கு ஒற்றி ஆரூர்” (கடவூர். மயானம்) என்று நம்பியாரூரர் கூறுவதறிக. எந்தை தந்தை தந்தைக்குத் தந்தை ஏழேழ் காலும் வழி வழியாக வரும் தொண்டர் குடியிற் பிறந்தவனாதலின், புதியன் என்று என்னைப் புறக்கணித்துப் போக்குதல் கூடாதென்பர், “புதியன் என்றெனைப் போக்குதிரோ நீர்” என்றும், “பூருவத்தினும் பொன்னடிக்கடிமை பதிய வைத்தனன்” என்றும் வற்புறுத்துகின்றார். “எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட பெம்மான்” (ஆலங்காடு) என்று நம்பியாரூரரும் கூறுதல் காண்க. பூருவம் என்பது முன்னைக் காலங்களையேயன்றி முன்னைப் பிறப்பையும் குறிக்குமாதலின், முற்பிறப்பிலும் நான் நின் பொன்னடிக்கடிமை பூண்டவன்; இல்லது பிறவாது என்றபடி முற்பிறப்பில் இல்லையாயின், இப்பிறப்பில் எனக்கு இவ்வடிமை விருப்புத் தோன்றாது என்றார் என்றுமாம். கணக்கெழுதி வைத்தல் இறைவன் இயல்பாதல் பற்றி “அந்தப் பழங்கணக்கினைப் பார்ப்பதில் என்னே” என்று கூறுகிறார். “தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று, அமுது காமுற் றரற்றுக்கின் றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே” (இன்னம்பர்) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. புதியனல்லன் எனின், முதியவனாதலால் தொண்டுக்காகாய் என விலக்கக் கருதுவையாயின், யான் விலக்கற்குரிய முதுமையுடையனல்லன் என்பார், “முதியன் அல்லன் யான்” என்றும், எத்தகைய வேலையையும் செய்தற்கேற்ற உடல்வலி படைத்தவன் என்றற்கு “எப்பணி விடையும் முயன்று செய்குவேன்” என்றும், விடாப்பிடியாய்ப் பேசுவதுகொண்டு என்னை மூர்க்கன் எனக் கருதலாகாது என்பாராய், “மூர்க்கனுமல்லேன்” என்றும் உரைக்கின்றார். முயன்றால் முடியாததில்லை என்பவாகலின், “முயன்று செய்குவேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால், புதியன் முதியன் என்று நினைந்து என்னை அடிமை கொள்ள மறுக்கலாகாது என விண்ணப்பித்தவாறாம், (6)
|