1188.

     ஒழுக்கம் இல்லவன் ஓர்இடத் தடிமைக்
          குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
     புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
          போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
     பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
          பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
     தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
          தூய மால்விடைத் துவசத்தி னீரே.

உரை:

      ஒற்றியூரை யுடைய பெருமானே, தூய பெரிய விடை யெழுதிய கொடியை உயர்த்தவரே, நல்லொழுக்கம் இல்லாதவனாகிய இவன் ஒருவரிடத்து அடிமையாளாக ஏவின செய்தற்குதவுபவனாக மாட்டானோ என்று திருவுள்ளத்தே நினைப்பீராயின், புழுங்கும் நெஞ்சினையுடைய யான் உம்முடைய திருமுன் போந்து நிற்பேனாயின், புண்ணியமாகிய பழங்களைப் பழுத்தளிக்கும் உயர்பண்புடைய மரமாவேன்; என்னைப் பார்த்தவரும் அப் பண்பினை யுடையவராவர்; தொழும்பனாகும் என்னை ஏன்று ஆளாகக் கொள்ளுதல் வேண்டும். எ.று.

     ஏவினவற்றை விரும்பி முறைப்படி தவறுதலின்றிச் செய்வது ஆளாயினார்க்கு அமையும் சிறந்த நல்லொழுக்கம்; அவ்வொழுக்கம் என்பால் இல்லையாதலால் யான் ஆளாதற்கேற்றவ னல்லனெனக் கருத வேண்டா என்பார், “ஒழுக்கமில்லவன் ஓரிடத் தடிமைக்குதவுவான் கொல்என் றுன்னுகிற்பீரேல்” எனவும், ஏற்பீரோ ஏற்க மாட்டீரோ என்று ஐயுற்று வருந்தும் மனமுடையேன் என்பார், “புழுக்க நெஞ்சினேன்” எனவும் கூறுகிறார். என்னை அடிமை கொண்டு திருமுன்னின்று ஏவின செய்பவனாக என்று கொள்வீராயின் என்பார், “உம்முடைச் சமுகம் போந்து நிற்பனேல்” என்றும், அந்த வாய்ப்பு எய்துமாயின், யான் செய்யும் பணி முறை கண்டு உள்ளத்தே மிக்க உவகை கொள்வீர் என்பாராய், “புண்ணியக் கனிகள் பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்” என்றும் உரைக்கின்றார். உயர்ந்த பண்புடையான் ஒருவன் பணிமகனாகக் கிடைப்பது புண்ணியப் பயனாதலின், “புண்ணியக் கனிகள் பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்” என்கின்றார். நற்பண்பும் நற்செயலுமுடையானைக் கண்டால் யாவரும் வியந்து அவனைப் பின்பற்றுவராதலால், “பார்த்த பேரும் அப்பரிசினராவர்” என்று இயம்புகிறார். தொழும்பன் என்பது தொழுக்கன் என வந்தது. குணத்தரு - குணத்தையுடைய மரம்.

     இதனால், நல்லொழுக்க மில்லாதவனோ என ஐயுற்று என்னை மறுத்தல் வேண்டா; கண்டார் என் பண்பும் செயலும் கண்டு பின்பற்றும் அளவுக்கு இனிய அடியனாய் ஒழுகுவேன் என விண்ணப்பித்தவாறு.

     (7)