1189. பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப்
பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும்
இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல்
இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர்
செச்சை மேனீயீர் திருவுளம் அறியேன்
சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண்
துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: குற்றம் போக்கினார்க்கு அருள் புரியும் திருவொற்றியூரை யுடைய பெருமானே, தூய பெரிய விடை யெழுதிய கொடியை யுடையவரே, வீடுதோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பித்துடையவர் என்று உம்மை இகழ்ந்து பேசுபவர் பேச்சினைக் கேட்டுளேனாயினும், உம்முடைய திருவடிக்கு வேண்டும் அடிமையாப் பணி செய்தற்பொருட்டு என்னுள்ளத்தே ஆசை நிலைபெற்றுள்ளது; எனது ஆசையை நிறைவித்தருள்க. செச்சை மலர்போற் சிவந்த மேனியையுடைய உமது திருக்கருத்தை அறிகிலேனாதலால், சிறியனாகிய யான் மனம் திகைக்கின்றேன். எ.று.
துச்சம் - துச்சையென வந்தது. துச்சம் என்பது அற்பத்தையும் குற்றத்தையும் உணர்த்துவது. அவன் என்னைத் துச்சமாக நினைக்கின்றான் என்பது உலக வழக்கு. “குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்” (ஆவர்) என ஞானசம்பந்தர் முதலியோர் கூறுவதால், “துச்சை நீக்கினார்க் கருளொற்றி யுடையீர்” என்று சொல்லுகிறார். பிச்சையேற்று உண்பதை அடியார் பலரும் ஒழியாது உரைத்தல் பற்ற, “பிச்சையேற்றுணும் பித்தரென் றும்மைப் பேசுகின்றவர்” என்று கூறுகிறார். “சீர்மலி செல்வம் பெரிதுடை செம்பொன் மாமலையே, கார்மலி சோலை சுலவு கடல் நாகைக் காரோணனே, வார்மலி மென் முலையார் பலிவந்திடச் சென்றிரந்து, ஊர்மலி பிச்சை கொண்டுண்பது மாதிமையோவுரையே” (நாகை) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. பிச்சையேற்று உண்பவனும் பித்தனுமாய ஒருவன் பிறர்க்குக் களைகணாவதில்லை யென்பது பற்றி, “பேச்சினைக் கேட்டும்” எனவும், எனக்கு நின்பால் பேரன்பு உளதாகின்றது என்பார் “இச்சை நிற்கின்றது உம்மடிக்கேவல் இயற்றுவான்” எனவும், இச்சை பெரிதாயிருத்தலால் இசைந்தருளல் வேண்டும் என்பார் “அந்த இச்சையை முடிப்பீர்” எனவும் உரைக்கின்றார். செச்சை - சிவப்பு நிறம் வாய்ந்த வெட்சி மலர். செச்சை மலர்போலும் செம்மேனி யம்மானதலால், “செச்சை மேனியீர்” எனக் கூறுகின்றார். “ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற செச்சை மாமலர் புரையும் மேனி யெங்கள் சிவபெருமான்” (சதக. 29) என்ற திருவாசகம் காண்க. எனது இச்சையைக் கூறினேன்; இனி தேவரீர் உள்ளக் குறிப்பு யாதோ அறிகிலேன் என்பாராய், “திருவுளம் அறியேன்” என்றும், குறிப்பறிய மாட்டாத அறிவுச் சிறுமை யுடையேன் என்றற்குச் “சிறியேன்” என்றும், அதனால் தாம் மனம் திகைப்பது புலப்பட, “மிகத் தியங்குகின்றனன் காண்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், சிவபெருமானைப் பிறர் பிச்சை யேற்றுண்டுழலும் பித்தனென எள்ளி யிகழினும் எனக்கு அடிப்பணி புரியும் தொண்டனாம் விருப்பு மிக்கிருத்தலால் ஏற்றருள்க என விண்ணப்பித்தவாறாம். (8)
|