119. கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
கழித்து நிற்கும் கடையனிவன் கருணை யில்லாப்
பொல்லாத பாவியென எண்ணி யென்னைப்
புறம்போக்கி லையாயான் புரிவ தென்னே
எல்லாம் செய்வல்லவனே தேவர் யார்க்கும்
இறைவனே மயிலேறும் எம்பிரானே
சல்லாப வளத்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: புகழ்ந்து பேசப்படும் வளம் பொருந்திய தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்து விளங்கும் சகச வாழ்வே, எல்லாம் செய்ய வல்ல கடவுளே, தேவரனைவர்க்கும் இறைவனே, மயில் மீது ஏறி வரும் எம்பெருமானே, கல்வி கற்காத வஞ்சகருடன் கூடிப்பலவிடங்கட்கும் சென்று திரிந்து நாளை வீணாகக்கழிக்கும் கடையனாகிய இவன் இரக்க மில்லாப் பொல்லாத பாவி எனத் திருவுள்ளத்தில் கருதி என்னைப் புறத்தே யோட்டி விடுவாயாயின், ஐயனே, யான் செய்யக் கூடியது என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை யாதலால் என்னைப் புறக்கணித் தொதுக்கி விடாதே, எ. று.
சல்லாபம்-இருவரும் பலருமாய்க் கூடிப் பேசும் புகழ் வரம்பில் ஆற்றலுடையவன் என்று சான்றோர் கூறுவதை, எளிய மொழியால் “எல்லாம் செய்வல்லவனே” என்றும், முப்பத்து முக்கோடி தேவராதலால் அவர்கள் அனைவரும் தொழுதெழு தெய்வமாதல் தோன்றத் “தேவர் யார்க்கும் இறைவனே” என்றும் இயம்புகின்றார். கற்றற்குரியவற்றைக் கல்லாமல் பிறரை வஞ்சிப்பதையே மிகக் கற்றவர் என்பாராய்க் “கல்லாத வஞ்சர்” எனக்குறிக்கின்றார். அவருடன் கூடித்திரிந்து நாளைக் கழித்துத் தம்மைக் கெடுத்துக் கொண்ட திறத்தை, “வஞ்சகர் பாற் சென்று வீணாள் கழித்து நிற்கும் கடையன்” என்று கூறுகின்றார். குணஞ்செயல்களால் கீழ்மைப்பட்டமை தோன்றக் “கடையன்” என்கின்றார். என்னைக் காண்பார் உள்ளத்தில் இக் கருத்தே யுண்டாகும் என்பதறிவித்தற்கு “இவன்” என்று சுட்டிக் கூறுகின்றார். இரக்கம் இல்லாத மனமுடையார்க்கு இரக்கம் புரிதல் மேலும் அத்தீமையை வளர்ப்பதாக முடியுமென எண்ணற்கு இடமிருப்பதை யெண்ணிப் பிறர் நினைக்கினும் நீ அவ்வாறு நினைத்து என்னைக் கைவிடலாகா தென்பாராய், “இவன் கருணை இல்லாப் பொல்லாத பாவியென எண்ணி என்னைப் போக்கில்” எனவும், எண்ணி வெறுத்தே புறத்தே சென்றொழிக என வெருட்டி விட்டால் எனக்குச் செயல் வேறேயில்லை என்று, தமது கையறவு புலப்பட, “ஐயா யான் புரிவது என்னே” எனவும் புகன்றுரைக்கின்றார்.
இதனால் கல்லாத வஞ்ச மக்களோடு கூடித் திரிந்து கெட்ட திறத்தை மொழிந்து தம்பால் இரங்கித் தம்மை யேற்றருள வேண்டுமாறு காணலாம். (17)
|