1190. ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
கமுது வேண்டிமா லக்கடல் கடைய
ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
சாலம் செய்வது தகைஅன்று தருமத்
தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: தருமத்தின் தனித்த பொன்மலை போன்றவரே, இயங்குதிணை நிலைத்திணை யென்னும் இருவகைப்பட்ட உயிர்களை வாழ்விக்கும் சூலப்படையை யுடையனாய்த் திருவொற்றியூரை யுடையனாகிய பெருமானே, தூய பெரிய விடை யெழுதிய கொடியை யுயர்த்தவரே, முன்பு கடல் கடைந்தபோது தோன்றிய விடத்தை யுண்டருளிய நீர், இனியும் அவ் வானவர் பொருட்டு அமுதம் பெற வேண்டித் திருமால் அக் கடலையே கடைய முழங்கி வரும் வெவ்விய விடம் பிறக்குமாயின், அதனைக் கண்டு நீ உண்க என்று கட்டளையிட்டாலும், உமது ஆணைப்படி யான் அதனை உண்பேன்; அதனால் எனக்கு அருள் செய்யத் தாமதம் செய்வது அழகாகாது. எ.று.
தருமத்தின் தனித்தன்மைக்கும் சலியாமைக்கும் ஒத்து ஓங்குவது பொன்னிறம் கொண்ட மேருமலை யாதலால், “தருமத்தின் தனிப்பொற் குன்றனீர்” எனக் கூறுகிறார். சரம் -அசையும் உயிர்ப் பொருள். அசரம் - நிலையாய் நிற்கும் மரம் செடி போன்ற உயிர்ப் பொருள். மண்ணுலகில் தோன்றி வாழ்வு நடத்தினாலன்றி உய்தி யின்மையின், “சராசரம் நடத்தும்” பெருமானே என்றும், மூவிலை வேல் எனப்படும் சூலப்படை யுடையராதலால் “சூல பாணியீர்” என்றும் இசைக்கின்றார். 'புவனியிற் போய்ப் பிறவாமையின் நாணாம் போக்குகின்றோ மிந்தப்பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' (திருப்பள்ளி) என்று மணிவாசகப் பெருமான் கூறுவது சிவன் சராசரம் நடத்துகிறான் என்ற கருத்தை வற்புறுத்துவது காண்க. தேவர்கள் அமுதம் வேண்டிக் கடல் கடையப் புக்ககாலைத் திருமால் முன்னின்று கடைந்தார் என்ற குறிப்பு விளங்க, “ஆல முண்டநீர் இன்னும் அவ்வானோர்க்கு அமுதம் வேண்டி மால் அக்கடல் கடைய” என்று உரைக்கின்றார். “வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே” (சிலப், ஆய்ச்) என இளங்கோவடிகள் இயம்புவதாலும் மால் கடல் கடைந்த வரலாறு விளங்குகிறது. கடைவது பொறாது கடல் ஓலமிட நஞ்சு எழுந்தமை பற்றி, “ஓல வெவ்விடம்” என்றும், முன்பு எழுந்த விடத்தைத் தான் உண்டமையின், இப்பொழுது தொண்டனாகிய என்னைப் பணிக்கினும், யான் சிறிதும் தளராமல் தேவரீர் ஆணையாதலின் அஞ்சாது உண்பேன் என்பார், “வெவ்விடம் வரின் அதை நீயே உண்க என்றாலும் உரைப்படி உண்கேன்” என்றும், இசைக்கின்றார். இவ்வாறு யான் ஆணையிட்டுச் சொல்லியும் காலம் தாழ்ப்பது தேவரீர் நிலைமைக்கு நன்றன்று என்பாராய், “சாலம் செய்வது தகையன்று” என்று சொல்லுகின்றார்.
இதனால், என்னை யாட்கொண்டு நஞ்சு தந்து உண்க என்று பணிக்கிலும் ஆணை யென்று உண்பேன்; என்னை அடிமை கொள்க என விண்ணப்பித்தவாறு. (9)
|