1191.

     முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
          முந்து றேன்அவர் முற்பட வரினும்
     சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
          தொண்டர் தம்முடன் சூழ்ந்திடீர் எனினும்
     புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
          பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
     துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
          தூய மால்விடைத் துவசத்தி னீரே.

உரை:

      புள்ளிகள் பொருந்திய படத்தையுடைய பாம்பை அணியாக வுடையராய்த் திருவொற்றியூரில் மேவும் பெருமானே, தூய பெரிய விடை யெழுதிய கொடியை உயர்த்தவரே, முத்தி வழங்கும் திறமில்லாத தேவர்கள் தாமாகவே என்முன் வந்து நின்றாலும் முன்னே நிற்க மாட்டேன்; முத்திப் பேற்றுக்குரிய சுத்தராகிய திருவணுக்கத் தொண்டர் கூட்டத்தில் சேர்க்க உளம் கொள்ளீரென்றாலும், சிவஞானச் செல்வராய்ப் புறத் தொண்டு புரியும் தொண்டர் கூட்டத்தில் என்னைச் சேர்க்கினும், அதுவே எனக்குப் போதுமானதாகும். எ.று.

     சிறு தெய்வங்கள் தம்மை வணங்கி வழிபடுபவர்க்கு உலகியல் வாழ்வில் இடர் நீக்கி யுதவுமாயினும், முத்திப் பேற்றுக்குரிய ஞான வாய்மை நல்குவன வல்லவாதலால், அத் தெய்வங்களே வலிய வந்து நலம் செய்யினும் அவற்றின்முன் செல்லமாட்டேன் என்பாராய், “முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான் முந்துறேன் அவர்முற்படவரினும்” என்று கூறுகின்றார். சிறு தெய்வ வழிபாடு முத்திப் பயன் நல்காது என்னும் முறைமைபற்றி இவ்வாறு இயம்புகின்றாரென அறிக. இறைவன் திருவடியை நினையவொட்டாத மும்மலங்களின் நீங்கிய சிவஞானச் செல்வர் சுத்தான்மாக்கள் என்ற பெயருடன் சிவனுக்கு அருகிருந்து பணிபுரியும் அணுக்கத் தொண்டராதலால், “சுத்தியாகிய சொல்லுடை அணுக்கத் தொண்டர்” என்று சொல்லுகின்றார். சொல் - புகழ். மலங்களோடு கூடிய சகலரினத்துத் தொண்டர் நல்ஞானத்தாற் சிவனைத் தெளிந்து சிவபோகச் சூழலுக்குப் புறத்தே யிருந்து தொண்டு செய்பவர் புறத்தொண்டர்; புத்தி - ஞானம். அத்தொண்டர் கூட்டத்து ஒருவனாக இருந்து பணி செய்க என்று பணிக்கினும் அது எனக்கு நிரம்ப அருள் செய்தவாறாம் என்பார். “புறத் தொண்டர் தம்முடனே பொருந்த வைக்கினும் அதுவே போதும்” எனப் புகல்கின்றார்.

     இதனால், தொண்டர் கூட்டத்துட் சேர்ப்பதாயின் எத்தகைய கூட்டம் வேண்டுவதென்னும் வினாவிற்கு விடை கூறுமாற்றால் புறத் தொண்டர் கூட்டத்துச் சேர்த்தருள்க, அதுவே போதுமானது என விண்ணப்பித்தவாறாம்.

     (10)