1192. என்ன நான்அடி யேன்பல பலகால்
இயம்பி நிற்பதிங் கெம்பெரு மானீர்
இன்னும் என்னைஓர் தொண்டன்என் றுளத்தில்
ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர்.
பன்ன என்உயிர் நும்பொருட் டாகப்
பாற்றி நும்மிசைப் பழிசுமத் துவல்காண்
துன்னு மாதவர் புகழ்ஒற்றி உடையீர்
தூய மால்விடைத் துவசத்தி னீரே.
உரை: பெரிய தாபதர் கூடிப் புகழும் ஒற்றியூரை யுடையவரே, தூய பெரிய விடையெழுதிய கொடியை யுயர்த்த பெருமானே, இவ்விடத்தில் நானோர் அடியவன் மிகப் பலகாலும் சொல்லி நிற்பதால் பயன் என்ன? எம்பெருமானே, இன்னமும் என்னைத் தொண்டருள் ஒருவனாகத் திருவுளத்தில் ஏற்றுக் கொள்ளீராயின், பெரிய கடல் சூழ்ந்த இம் மண்ணுலகில் உள்ளோர் வாயாற் பேசுமாறு என்னுடைய உயிரை நும்பொருட்டுப் போக்கிக்கொண்டு உமது பேரில் பழி சுமத்துவேன், அறிக. எ.று.
உம்முடைய திருவடியை மனத்தில்கொண்டவன் நான் என்பார், “நான் அடியேன்” என்றும், அடியராயினார் அழையாமே அருள் நல்கும் பெருமானாகிய உன்பால் மிகப் பலகாலும் என்னைத் தொண்டருள் ஒருவனாக ஏற்றருள்க என வேண்டுவது பயனில் உழைப்பாக முடிகிறது என்பார், “பலபல கால் இயம்பி நிற்பது என்ன” என்றும் சினமுற்றவர் போற் பேசுகின்றார். இனி என்னைத் தொண்டனாக ஏற்காவிடில், தற்கொலை செய்துகொண்டு பழியை உம்மேல் உலகோர் சொல்லுமாறு செய்வேன் என்றற்கு, “இன்னும் என்னையோர் தொண்டனென்று உளத்தில் ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர் பன்ன, என்னுயிர் நும் பொருட்டாகப் பாற்றி நும்மிசைப் பழி சுமத்துவல் காண்” என்றும் இயம்புகின்றார். என்ன -யாது பயன். எம்பெருமானார் என்பது, எம் பெருமானீர் என விளி கொண்டது. கொள்ளீரேல் எனற்பாலது கொள்ளிரேல் எனக் குறுகியது, செய்யுள் விகாரம். பன்னுதல் - பேசுதல். பாற்றுதல்-போக்குதல். இவ்வாறே நம்பியாரூரர், “திண்ணென வென்னுடல் விருத்தி தாரீரே யாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா கடல்நாகைக் காரோண மேவி யிருந்தீரே” என்றும், மணிவாசகப் பெருமான், “விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய் மதியன், பழை தருமாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே” (நீத்தல்) என்றும் உரைப்பது காண்க.
இதனால் தொண்டனென்றும் ஏன்றுகொள்ளாவிடில் தற்கொலை செய்துகொண்டு இறைவனாகிய நின்மேல் உலகவர் பழிகூற மாள்வேன் என்று தெரிவித்துக் கொண்டவாறாம். (11)
|