57. மருட்கை விண்ணப்பம்

திருவொற்றியூர்

    அஃதாவது குற்ற மிகுதி கண்டும், அவற்றுள் தலையாய காமக் குற்றத்தின் கடுமையுணர்ந்தும் மருண்ட உள்ளத்தால் இறைவனைப் பராவி அருட்டுணை புரிய வேண்டுமென விண்ணப்பித்தல்.

    இதன்கண், பல்வகைக் குற்றங்களாகிய பகைகளால் கையறவுபடுவதும், வேறு சார்பின்மை கூறுவதும், இவற்றுக் கேதுவாகிய வினைப்பிணிப்பை நினைந்து, அது நீங்குதற்கு நெறி வேண்டுவதும், காம வேட்கையின் இயல்பும், காவலகம் போல் சிறைப்படுத்தும் அதன் தன்மையும், மிக்க காமத்தால் வருந்துன்பத்திற் கஞ்சுவதும், காமத்தால் விளையும் நோய் தீர்த்தற் பொருட்டுக் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுவதும், இறைவனுக்கு அடித்தொண்டு புரிவதால் துன்பச்சுமை நீங்குவது துணிதலும், துன்ப மில்லாத இன்ப வாழ்வுக்கு ஏதுவும் துணையுமாவது திருவருள் வாழ்வு என்பதை யறிந்து விழைதலும் தெளிவுறச் சிந்தை மகிழக் கூறப்படுகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1193.

     யாது செய்குவன் போதுபோ கின்ற
          தண்ண லேஉம தன்பருக் கடியேன்
     கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
          கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
     வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
          வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
     மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      அழகுமிக்க சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரையுடைய பெருமானே, அருட்கொடையால் வளவிய கையையுடைய பெருமானே, என் கண்ணின் மணிபோல்பவரே, அண்ணலே, தேவரீர், உம்முடைய மெய்யன்பர்களுக்கெல்லாம் அடியனாகிய யான், குற்றம் செய்தாலும் பொறுத்தருளும் நல்ல கொள்கையுடையவர்; என்னைச் சூழும் குறும்பராகிய பொல்லாதவர்கள் என்னொடு வீண்வாதம் புரிவதால் யான் மனம் சோர்ந்து விடுகிறேன்; அவர்களை எதிர்த்தழிக்கும் வன்மையும் என்பால் இல்லை; வேறே செயல்வகை ஒன்றும் தெரியாது மருளுகின்றேன்; வாழ்நாளும் கழிந்த வண்ணம் இருக்கிறது; செய்வகை ஒன்றும் தெரிகிலேன், தெளிவருள்க. எ.று.

     மாதர் - அழகு. எல்லார்க்கும் இனியவே செய்யும் பெருமானாதலின் “வண்கையீர்” எனப் போற்றுகின்றார், இறைவன்பால் உள்ள காதல் மிகுதி புலப்பட, “என்கண் மணி யனையீர்” என்கின்றார். தன் காதல் மிகுதி தோன்றத் தான் கோவலனுக் கெழுதிய ஓலையை அவனிடம் கொடுக்குமாறு சொல்லும் மாதவி, “கண்மணி யனையாற்குக் காட்டுக” (சிலப்) எனபது காண்க. கோது - குற்றம். குற்றம் புரியும் இயல்பினேன் ஆதலின் என்னைப் பொறுத்தருள்வது குணக்குன்றாகிய உனக்குக் கடனாயிற்று என்பார், “அடியேன் கோது செய்யினும் பொறுத்தருள் புரியும் கொள்கையீர்” எனக் கூறுகின்றார். “குற்றம் புரிதல் எனக்கியல்பே, குணமாக் கொள்ளல் உனக்கியல்பே” என வள்ளற் பெருமான் பிறிதோரிடத்துக் கூறுவதும், “குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்” (புன்கூர்) என்று நம்பியாரூரர் நவில்வதும் காண்க. ஐம்புலன்களையும் அறுவகைக் குற்றங்களையும் குறும்பர் என உருவகம் செய்கின்றார். குறும்பு-குற்றம். குற்றம் செய்யும் போதெல்லாம் நல்லுணர்வெழுந்து மனத்தின்கண் அவற்றை யெதிர்த்துப் போராடுவது வழக்கமாதலின், “குறும்பர் வாது செய்கின்றார்” எனவும், மனம் அவற்றின்வழி நிற்பதன்றி நன்மைக்கண் நின்று நெறிப்படுத்தும் வலி யிழத்தலின் “வலியிலேன் மனந் தளர்கின்றேன்” எனவும் உரைக்கின்றார். இவ்வாற்றல் கையறவு படுதலைச் “செயும் வகையொன்றும் அறியேன்” என்றும், அது நாடி நிற்றற்குள் காலம் நில்லாது கழிகின்றமை கண்டு, “யாது செய்குவேன் போது போகின்றது” என்றும் இசைக்கின்றார்.

     (1)