1196.

     என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
          என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
     முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
          மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
     அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
          அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
     வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      வன்கண்மை யில்லாத நன்மக்கள் புகழ்ந்து போற்றும் திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானே, கொடை நலத்தால் வளவிய கையை யுடையவரே, என் கண்மணி போன்றவரே, என் பிறவித் துன்பத்தை யாவர்க்கு எடுத்துரைப்பேன்? அதன் பொருட்டு யான் என்ன செய்ய வல்லேன்; யாதுதான் யான் செய்ய நினைக்க முடியும்?் முன்னைப் பிறப்பில் நுகர்ந்து கழிய எஞ்சிய வினைப்பயனால் மூடத்தன்மை நிறைந்த வாழ்க்கையாகிய காட்டின்கண் அன்பில்லாத காம வேட்கை எனப்படும் வேடனால் அலைக்கப்பட்டு, உம்முடைய திருவருள் துணையைப் பெறுதற்கு விரும்புகின்றேன்; அருள் புரிக. எ.று.

     அன்பில்லாத நெஞ்சத்தில் இரக்கமின்மையே யன்றி, வன்கண்மையும் அமைந்துவிடுதலின், மென்மை யுள்ளத்தார் புகழும் ஒற்றியூரை, “வன்பிறந்தவர் புகழ் ஒற்றியுடையீர்” என்கின்றார். “மெல்கி நாளும் உருகில் ஆராத இன்பன்” (முல்லை) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. பிறந்துற்ற துன்பத்தைப் பெரிதும் நினைந்து பேதுறுகின்றாராதலின், “என் பிறப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்” எனவும், துன்பத்தின் நீங்குதற்கு வாயில் காணாமை புலப்பட “என்செய்வேன் என்னை என்செய நினைக்கேன்” எனவும் இயம்புகின்றார். துன்பத்திற் கேது வினையென்பது நினைவில் எழுதலாலும், அவ்வினைகள் தாமும் முன்னைப் பிறவிகளில் தொடர்ந்து வருதலாலும், அவற்றுள் பயன் நுகர்ந்து கழிந்தன போக, எஞ்சியவை எடுத்து பிறவியில் அடுத்து வந்துறுத்தலானும், “முன் பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே” என்றும், இனி ஈட்டப்படும் வினைக்கெல்லாம் தாயாதல் பற்றி, நின்று வருத்தும் காம நோயை, “வெங்காம வேட்டுவனால் அலைப்புண்டேன்” என்றும் இசைக்கின்றார். சேடம் என்றது ஈண்டு சஞ்சித வினையை, நிகழ்ந்தது மறதியாலும், நிகழ்வது மலமறைப்பாலும் மூடப்படுதலின் உலகியல் வாழ்வை “மூட வாழ்க்கை” யென்கின்றார். வாழ்க்கையைக் காடென்கின்றார். காமம், மோகம் முதலிய குற்றங்களாகிய வேட்டுவர்கள் வாழ்வது பற்றி, வேட்டுவர்க்குக் காட்டகத்தே போவாரை யலைத்தல் இயல்பாதலின், “காம வேட்டுவனால் அலைப்புண்டேன்” என்றும், அன்புடைக் காமம் அறநெறிப் படுத்துதலின், அதனை விலக்கி, அலைத்து வருத்தும் மாறாய காமத்தை, “அன்பிறந்த வெங்காமம்” என்றும் விளக்குகின்றார். இக் கொடிய அன்பிறந்த காட்டக வாழ்வு, துன்பத்திற்கே ஏதுவாம் என்பதுபற்றி அழியா இன்பச் சூழலாகி உமதருள் வாழ்வு வேண்டுகிறேன் என்பார், “உமது அருள் பெற விழைந்தேன்” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால், அருள் வாழ்வு பெற விழைதற்குக் காரணம் காட்டிய வாறாம்.

     (4)