1198.

     இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
          என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
     துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
          சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
     அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
          அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
     வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      வன்மனமுடையவர் விரும்பாத திருவொற்றியூரை யுடைய பெருமானே, அருட் கொடையால் வளவிய கையை யுடையவரே. என் கண்ணின் மணி போல்பவரே, இன்பமெனப் படுவதைப் பெறுதற்கு ஆசைப்பட்டு இடர்மிகுந்து துன்பமே யுற்றேன்; என்னைப் போன்ற ஓர் ஏழைமகன் இங்கே ஒருவனையும் காண்கின்றேனில்லை; துன்பத்தையே பெரிய சுமையாகக் கொண்டு சுமந்தவண்ண மிருக்கின்றேன்; துணையாவாரும் இல்லை; அன்பர்களின் உள்ளத்தில் எழுந்தருளும் தேவர் தேவனாகிய நினது திருவடிக்கு ஆளாவேனோ என எண்ணி மன மருட்சி யடைகின்றேன்; தெளிவு தந்தருள்க. எ.று.

     வன்பர் - அன்புக்கு மறுதலையான வன்பு நிறைந்த உள்ளமுடையவர், வன்பு - மென்மையின்மை, இன்பம் என எல்லோராலும் விரும்பப்படும் ஒன்றை யானும் விரும்பிப் பெறமாட்டாது வருந்தினேன் என்பார், “இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன்” என்கின்றார். “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்பது தொல்காப்பியம். அதற்குக் காரணம் இதுவென்பார், இன்பப் பேற்றிற்குரிய வாயில் அற மென்பதை யறியாத ஏழைமை யென்பாராய், “என்னை யொத்த ஓர் ஏழை இங்கறியேன்” என உரைக்கின்றார். “அறத்தான் வருவதே இன்பம்” எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. துன்பமாவது, இன்பப் பேற்றுக்குரிய நல்வழி யல்லாத அல்வழி மேற்கொண்டு செய்த வினையின் விளைவு. அது, சிறுதுளி பெருவெள்ளமாதல் போலச் சிறது சிறதாகச் சேர்ந்து பெருகித் தாங்கரும் சுமையாம் என்பது தோன்றத் “துன்பம் என்பது பெருஞ் சுமையாக” எனவும், தான் செய்த வினையால் தனக்கே யுரியதாய் விளைந்து பெருகினமையின், அதனைத் தானே சுமத்தல் வேண்டிற்று என்பார், “சுமக்கின்றேன்” எனவும், அவ்வினைச் சுமையைத் திருவருளால் அல்லது குறைத்தலாகாமை புலப்பட “அருள் துணை சிறிதும் இல்லேன்” எனவும், சிறிது கிடைப்பினும் துன்பச் சுமை எத்துணைப் பெரிதாயினும், எளிதில் தாங்க வியலு மென்பது விளங்கச் “சிறிதும் இல்லேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். முற்றும்மை விகாரத்தால் தொக்கது. இனி, திருவருள் துணையால் துன்பப் பெருஞ்சுமையை எங்ஙனந் தாங்க இயலும் எனும் வினாவிற்கு விடை கூறலுற்ற வள்ளற் பெருமான், தேவர்தேவனாகிய நின் திருவடிக்குக் குற்றவேல் புரியும் திருவருள் சிறிது கிடைப்பின் இயலுவதாம் என உரைப்பாராய், “அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர் அடிக்குற் றேவலுக் காட்படுவேனோ” என்கின்றார். அன்புடையார் அன்பின்கண் வீற்றிருப்பவனாதலால் சிவபரம்பொருளை, “அன்பர் உள்ளகத் தமர்ந்திடும் தேவர்” என்றும், தன்பால் அடித்தொண்டு புரிவார்க் கெய்தும் எத்தகைய பாரத்தையும் தாங்குவது அப்பெருமானுக்கு இயல்பாதலின், “அடிக் குற்றவேலுக் காட்படு வேனோ” என்றும் உரைக்கின்றார். “தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர்” (ஆரூர்) என்று நாவுக்கரசர் நவில்வது காண்க.

     இதனால், இறைவன் அடித்தொண்டு புரிவது சுமை நீங்குதற்கு வாயிலாம் எனத் தெரிவித்தவாறாம்.

     (6)