1199. ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
உரை: திருவருள் வாழ்வை நல்கும் திருவொற்றியூரை யுடைய பெருமானே, அருட் கொடையால் வளவிய கையை யுடையவனே, எனது ஊழ்வினையின் செயல் யாதோ அறியேன்; தேவரீருடைய திருவருளைப் பெறுதற்காகவே முயல்கின்றேன்; கீழ்மையை யுண்டு பண்ணும் காமப்பிணி என்னைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்றது; மேலும் கீழே தள்ளவே நினைக்கின்றது; பாழ் செய்யும் வினைகளையே புரிகின்ற பாவியாகிய யான் வேறே செய்தற்குரிய நன்னெறியை அறியாமல் மருண்டு ஏக்க முறுகின்றேன்; தெளிவு தந்தருள்க. எ.று.
திருவருள் இன்ப வாழ்வைப் பெறுவித்தற் கெனவே மண்ணக வாழ்வினை அருளுகின்றானதலால், “வாழ்வினைத் தரும் ஒற்றியூர் உடையீர்” என உரைக்கின்றார். மண்ணக வாழ்வு - இன்பமும் துன்பமும் ஆகிய இரண்டும் விரவியது; துன்பமே யின்றி இன்பமே நிறைந்தது திருவருள் இன்ப வாழ்வு. எல்லா உயிர்களும் வாழ்வாங்கு வாழ்ந்து, அந்தத் திருவருள் இன்பவாழ்வைப் பெறுதல் வேண்டுமென்பது, சிவபரம்பொருளின் திருவுள்ளம் என்பது சைவ நூல்கள் எல்லாவற்றிற்கும் ஒப்ப முடிந்த உண்மை யென்றுணர்க. ஊழ்வினை - பயன் ஊழ்த்து நிற்கும் வினை. ஊழ்த்தல் - முதிர்தல். ஊழ்கனி - ஊழ் முகை என்றாற் போல. வினை ஊழ்த்த விடத்து அதன் பயன் அறிவில்லது ஆகலின், தவறாது சென்று செய்தவனைச் சேர்தற் பொருட்டுக் கூட்டு விக்கும். அறிவுருவினனாகிய முதல்வன், செய்வோன் பயனை நுகர்தற்கேற்ப, அவனுடைய அறிவு, செயல்களைத் திரிக்கின்றானாயினும், அச்செயல் வினையேதுவாக நிகழ்தலின் ஊழின் வினையெனப் படுகின்றது. அதனால், “ஊழ்வினைப்படி யெப்படி அறியேன்” என்றும், திரிந்த அறிவு செயல்களுக் கேற்பச் செய்வன செய்து நுகர்வன நுகர்கின்றமை விளங்க “உஞற்றுகின்றனன்” என்றும் உரைக்கின்றார். படி - தன்மை. இங்ஙனம் உஞற்றுவதால், வினைத்தடையின் நீங்கி அருட்பேறு வாய்த்தலின், “அருள்பெற உஞற்று கின்றனன்” என்கின்றார். “வினையால் அசத்து விளைதலால், ஞானம் வினை தீரி னன்றி விளையா” என்பது சிவஞான போதம். ஊழ்வினை யென்ற எண்ணத்துடன் செய்வன செய்தொழுகுவது வினைத் தொடர்பறுத்து வீடு பேறெய்துதற் கென்பது கருத்தாம். பிறத்தற்குரிய உயிர்கட்கு உடம்பு தரும் பெருமைத் தாயினும் தான் தரும் சிற்றின்பத்தால் உயிர் அறிவைக் கீழ்மைப்படுத்தும் சிறுமை யுடைமை பற்றித் “தாழ்வினைத் தரும் காமம்” என்கின்றார். அது தாழ்வைத் தரும் இயல்பிற்றாதலின், கீழே தள்ளுவதோடு மேன்மேலும் தள்ளுதற்கே சமைகின்றது என்பார், “எனைக் கீழ்த் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண்” என இயம்புகின்றார். தள்ளுகின்றதே உள்ளுகின்றது - தள்ளுதற்கே நினைக்கின்றது. தள்ளுகின்றது, காலங் காட்டும் தொழிற்பெயர். இங்ஙனம் பாழ் செய்யும் வினையே செய்தொழுகுவதால், தன்னைப் “பாழ்வினைக் கொளும் பாவியேன்” எனவும், இவ்விடர்ப் பாட்டினின்றும் நீங்கும் வழி யறியாமல் மருளுகின்றேன் என்பாராய்ச் “செய்யும் பாங்கறிந்திலேன் ஏங்குகின்றனன்” எனவும் எடுத்துரைக்கின்றார். அறிந்திலேன் - முற்றெச்சம். ஆல், அசை.
இதனால், வினைப் பிணிப்பினின்றும் நீங்கும் பாங்கறியாது ஏங்குகின்றமை எடுத்தோதியவாறாம். (7)
|