120.

    கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி யையோ
        கரைந்துருகி யெந்தாய் நின் கருணை காணா
    தென்னேயென் றேங்கி யழும் பாவியேனுக்
        கிருக்க விடமிலையோ நின்னிதயம் கல்லோ
    பொன்னே யென்னுயிர்க் குயிராய்ப் பொருந்து ஞான
        பூரணமே புண்ணியமே புனித வைப்பே
    தன்னேரில் தென் றணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     தன்னை யொப்பதில்லாத அழகிய தணிகை மலைமேல் எழுந்தருளும் மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, பொன்னே, என்னுடைய உயிர்க்கு உயிராய் அமைந்த ஞான நிறைவே, புண்ணிய வடிவமே, தூய்மையின் உறைவிடமே, கல்லைப் போலும் மனத்தையுடைய கீழ் மக்களோடு கூடித் திரிந்ததற்கு வருந்தி நெஞ்சம் கரைந்து உருகி உன்னை வேண்டியும், எந்தையே, உனது திருவருளைப் பெறாது காரணம் என்னையோ என்று ஏங்கி அழுகின்ற பாவியாகிய எனக்கு உன் அருட் சூழலில் இருப்பதற்கு இடமில்லையோ? அல்லது உனது மனம் தானும் கல்லோ, கூறுக, எ. று.

     அருளுருவாய முருகப் பெருமான் செருவெம்மை தணியப் போந்திருக்கும் சிறப்பு பிற மலைகட்கு இல்லாமையால் “தன்னேரில் தென் தணிகை” என்று சிறப்பிக்கின்றார். அருமை பற்றிப் “பொன்னே” எனவும், அறிவருளுவதால் “உயிர்க்குயிராய்” எனவும், நிறை ஞான மூர்த்தமாதலால் “பொருந்து ஞான பூரணமே” எனவும் புகழ்கின்றார். புண்ணியத்தின் பொருளாயும் தூய்மைக்கு இருப்பிடமாயும் விளங்குதலால் “புண்ணியமே புனித வைப்பே” எனப் புகல்கின்றார். மக்கட்குக் குணமும் செயலும் இனம் காரணமாகப் பெரிதும் உருவாதலை யறியாமல் இரக்கமில்லாத நெஞ்சினையுடைங் கீழ் மக்களோடு கூடி யானும் கல்போலும் மனமுடையனாயினேன் என்பாராய்க், “கல் நேய நெஞ்சகர் மாட்டு அணுகி” என்றும், அந்நினைவு தம்மை வருத்துதலால் “ஐயோ” என்றும் இயம்புகின்றார். வஞ்சர் வஞ்சகர் என வருதல் போல நெஞ்சர் நெஞ்சகர் என வந்தது. கூடற்காகாரோடு கூடிய குற்றத்தை யுணரு மிடத்து மனம் நீராய் உருகுமாதலால், “கரைந்துருகி” எனவும், உருகுமிடத்து உண்மையொளி தோன்றி முருகன் திருவருளை நாடு வித்ததும், அவ்வாறே அப்பெருமான் திருவருளை வேண்டியதும், வேண்டியது பெறாது அமுங்கியதும் விளங்க, “எந்தாய் நின் கருணை காணாது என்னே என்று ஏங்கி யழும் பாவியேன்” எனவும் உரைக்கின்றார். கருணையே உருவாகிய இறைவன் அதனைச் செய்யாமைக்குக் காரணம் தம்பால் உள்ள பாவம் என்பது தோன்றுவதால் “பாவியேனுக்கு” என்றும், புண்ணியம் செய்தவர்ளே புகுந்திருக்கும் சீரிடமாகிய முருகனது திருவடி நீழல் பாவிகட் காகா தென விலக்குண்டேனோ என்பாராய், “பாவியேனுக்கு இருக்க இடமில்லையோ” என்றும், பாவிகளும் தாம் செய்த பாவத்தை யுணர்ந்து மனம் திருந்தி அருட்பேறு வேண்டுவரேல் அவர்கட்கும் அருள் நல்குவது அருளாளர் செயல்வகை யாதலால் நீ அருள் புரியாமை கூடாது என நினைத்தலால் வெதும்பி, “நின் இதயம் கல்லோ” என்றும் கூறுகின்றார்.

     இதனால் வள்ளற் பெருமான், இரக்கமில்லாதாரோடு கூடிக் குணம் செயல் திரிந்தமை யுணர்ந்து வருந்தித் திருவருள் வேண்டிப் போந்த என்னை அருளாமை நன்றன்றென இறைஞ்சுமாறு காணலாம்.

     (18)