1200. இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை
எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்
மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்
வழிம றித்ததை மயக்குகின் றதுகாண்
குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்
குறைத்தும் அங்கது குறைகில தந்தோ
வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
உரை: வறட்சியுறாத வயல்களையுடைய திருவொற்றியூர்ப் பெருமானே, கொடை நலத்தால் வளவிய கையை யுடையவரே, என் கண்மணி போன்றவரே, இறவாப் பெருமை கொண்ட நன்மக்கள் தொழுது வணங்குகின்ற திருவடிகளைக் குற்றமின்றி எவ்வகையாலும் மறவாமல் நினைக்கலுற்றால் காமவுணர்வு தோன்றித் தடைசெய்து மயக்குகிறது; திருவருட் குறிப்பின்றியே என்னால் இயன்ற அளவு அதன் வலிமையைக் குறைத்த போதிலும் அது குறைகின்றதில்லை; இவ்வாற்றால் மருளும் என் மன மயக்கம் தீர அருள் புரிக. எ.று.
வறிப்பு - வறட்சி. நீர் வளம் இடையறாமை பற்றி, “வறிப்பிலா வயல்” எனச் சிறப்பிக்கின்றார். பிறப்பிறப்புக்களைத் தொடர்பறுத் தொழிந்த பெருமக்களை “இறப்பிலார்” எனப் புகழ்கின்றார். இறைவனை மெய்யன்போடு தொழுதெழுவார் பயன் பிறவாமை யிறவாமைகளைப் பெறுவதாயினும், பெற்றபின் தொழுதல் மீள அவற்றின் தொடர்பு எய்தாமைப் பொருட்டு. பிறப்பிறப்புக் குள்ளாயினோர் மறப்பு மறைப்புக்கட்கும் பிறவகைக் குற்றங்கட்கும் இரையாதல் இயல்பாதலின், குற்றம் நிகழாவாறு தற்காத்துக் கொண்டமை தோன்ற “எவ்வம் நீக்கி” என்றும், கணந்தோறும் மாறும் இயல்புடைய குணங்களால் மறதி முதலியன இடைப்புகாமைப் பொருட்டு “எவ்விதத்தாலும் மறப்பிலாது தேவரீர் பதத்தை உள்ளம் நினைத்திடின்” என்றும் கூறுகின்றார். நினைவொளி முன் மறதி யிருள் நில்லாதாகலின், இடையறா நினைவு இன்றியமையாதென வற்புறுத்தற்கு, “உளம் நினைத்திடில்” என எடுத்துரைக்கின்றார். முற்றவும் கெடுக்கப்படாத வன்மை யுடைமையின் காமவுணர்ச்சி தோன்றி, உள்ளத்தை மயக்குகின்றது என்பார், “காமம் வழி மறித்து அதை மயக்குகின்றது காண்” என விளம்புகின்றார். குறிப்பு, ஈண்டு திருவருள் உணர்வின்மேல் நின்றது. முன் குறிப்பின்றியே காம உணர்ச்சி எழாவாறு தடுக்கலாம் எனில், அது முந்தி விடுகிறது என்றற்குக் “குறிப்பிலாது” என்றார். என்றலும் உண்டு. குறிப்பறிந்தொழுகும் அறிவுடைமை காமத்துக்கின்மையின் அது பொருந்துவதாயில்லை. தனது இயற்கை வன்மையினால் காமவுணர்ச்சி சிறிதும் அடக்க அடங்காது முனைக்கிற தென்பார், “கூடிய மட்டும் குறைத்தும் அங்கது குறைகிலது” என்றும், அந்நிலையில் தன் மாட்டாமைக்கு வருந்துவாராய், “அந்தோ” என்றும் கூறுகின்றார்.
இதனால், இடங்கழி காமத்துக்கஞ்சி ஏங்கி முறையிட்டவாறாம். (8)
|