1201. சஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்
சலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே
அஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை
அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்
துஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ
துணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர்
மஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
உரை: மேக மண்டலம் அளாவ நீண்ட சோலைகள் நிறைந்த திருவொற்றியூரை யுடைய பெருமானே, கொடை நலத்தால் வளவிய கையை யுடையவரே, என் கண்மணி யனையவரே, கஞ்சித வினையால் விளையும் காமம் எனப்படுகிற கடலின்கண் மூழ்கித் தலை தடுமாறி அச்சம் மிக மேலிட்டு வருந்துகின்ற என்னை இனி அஞ்சுவ தொழிக எனச் சொல்லி யாதரிப்பவர் ஒருவரையும் இல்லேன்; இறந்த பின்பாகிலும் துன்பமில்லாத சுக வாழ்வு உண்டாகுமோ? துணையாரும் இல்லாதவர்க்குத் துணையாக நின்று அருளுகிற தேவரீர், எனது மருட்கை நீங்கத்துணை செய்தருள்க. எ.று.
மஞ்சு - ஈண்டு மேக மண்டலத்தைக் குறிக்கின்றது. சஞ்சிதம் - முற்பிறவியில் செய்யப்பட்டுப் பயன் நுகரப் படாதிருக்கும் எச்ச வினை. காமம் - பிறப்பிலேயே அரும்புகின்ற குற்றவகையுள் ஒன்று. குழவிப் பருவத்திலேயே அரும்புதல் பற்றி, இதற்குக் காரணம் முன்னை வினையென்று உணர்ந்தோர் கண்டமையின், “சஞ்சிதந் தரும் காமம் என்றிடுமோர் சலதி” என்கின்றார். காமம் போல் வெகுளியும் மயக்கமும் உலகில், உடல் தோன்றும் போதே உடன் தோன்றி நோய் செய்தலின், “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிந்தித்துரைக்கின்றார். சலதி - கடல். நீந்தலருமை பற்றிக் காமத்தைக் கடல் என்கின்றார். “இன்பங் கடல் மற்றுக் காமம்” (குறள்) என்பது காண்க. ஆசை வகைகளாகிய அலைகளால் அலைப்புண்டு கரையேற மாட்டாது காமக் கடற்குள்ளே மூழ்கிக் கிடக்கின்றமை தோன்றச் “சலதி வீழ்ந்ததில் தலைமயக்குற்றே அஞ்சி யஞ்சி நான் அலைகின்றேன்” என்கின்றார். குற்றம் செய்தவர் நாணத்தாற் பிறர்க்கு அஞ்சுவது போலக் குற்ற வகையாகிய காமக் கடற்குள் வீழ்ந்தாரும், பிறர்க் கஞ்சுவது பற்றி, “அஞ்சி யஞ்சி யலைகின்றேன்” என்கின்றார். குற்றம் செய்தாரை மேலும் செய்க என ஊக்குவோர் உலகத் தில்லாமை போலக் காமுகரைத் துணைசெய்து ஊக்குதற்கு நல்லோர் இல்லாமையின், “என்னை யஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்” என்கின்றார். காம நோய்க்கு “அஞ்சி இறந்து படுவோமெனில், உன்னை மறவாமற் போற்றி வணங்கித் திருவருள் இன்பம் பெறுதல் கூடுமோ என்ற ஐயந் தோன்றி அலைக்கின்றது” என்பார், “துஞ்சினாற் பின்பு சுகம் பலித்திடுமோ” என்கின்றார். இறந்த வழிப் பிறப்புப் பிறிதாகுமாயின் உயிரை மறப்புச் சூழ்ந்து
கொள்ளுமாதலின், சுகம் பெறலாகாது என்பது கருத்து. “சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின், மறக்குவென் சொல் என் காதலன் எனவே” (நற்றிணை) என்று சங்கச் சான்றோரும், “பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ என்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே” (தனி) என்று நாவுக்கரசரும் உரைப்பன காண்க. துணையின்றித் தனித்து வருந்துவார்க்குத் துணையாய் நின்று தகுவன உதவுதலினும் பேரறம் பிறிதின்மையின், அது செய்து பிறங்கும் பெருமானாதலின், எனது துணையாதல் வேண்டுமென்று இறைஞ்சுவாராய்த் “துணையிலார்க்கொரு துணையென இருப்பீர்” என்கின்றார்.
இதனால், காம நோய் தீர்தற்குத் துணை புரியுமாறு இறைவனை வேண்டியவாறாம். (9)
|