1202.

     அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
          காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
     சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
          துணிவு கொள்வீரோ தூயரை ஆளல்
     அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
          அருட்க ணீர்எனை ஆளலும் தகுங்காண்
     மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
          வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

உரை:

      வளமிக் குயர்ந்த திருவொற்றியூரை யுடைய பெருமானே, கொடை நலத்தால் வளவிய கையை யுடையவரே, என் கண்ணின் மணி போன்றவரே, இருள் போன்ற கூந்தலையுடைய மகளிரின் இடையின்கீழ்க் கமரின்மேல் மிக்க ஆசையுற்று வருந்தும் எனது அறியாமைக்கு அளவு சொல்ல முடியாது; அப்பெற்றியனாகிய எனக்கு அருள் புரியத் தேவரீர் திருவுள்ளம் கொள்ளுவீரோ? தூய்மை யுடைய பெருமக்களை அருள் செய்து ஆள்வதன்றோ தேவரீர்க்கு இயல்பாகும்; ஆயினும் நல்ல அருள் பெருகி யொழுகும் கண்களை யுடையவராதலால், எளிய என்பால் அருள் செய்வதும் தக்கதே யாகும். எ.று.

     அல் - இருள். இருள் போற் கரிய கூந்தலையுடைய மகளிரை, “அல்ல ஓதியர்” என்கின்றார். அல்ல என்பதில், ஈற்றகரம் சாரியை. கமர் - பிளவு, அறிவுடையவராயின் உண்மை நிலை கண்டு அருவருத்து விலகுவர் என்பதுபற்றி, ஆசை வைத்திடும் என் அறிவின்மை எனவும், அவ்வறிவின்மையின் மிகுதி புலப்பட, “அளவை சொல்லவோ முடியாது” எனவும் உரைக்கின்றார். தூய நினைவும் சொல்லுமுடைய பெருமக்களையே இனிய அருள்செய்து ஏன்று கொள்வது இறைவன் இயல்பாதலைத் தான் உணர்ந்திருப்பதை எடுத்துரைப்பாராய்த் “தூயரை ஆளல் அல்லவோ உமதியற்கை” என்றும், அதற்கு மாறாகக் கழிகாமத்தனாகிய என்னை யருளுதற்கு உமது திருவுள்ளம் எண்ணாது என்பார்.“எனையாளத் துணிவு கொள்வீரோ” என்றும், எனினும் அருளே திருமேனியாக வுடைய பெருமானாதலின், என்னை யாண்டருளுவது தேவரீரது அருளாட்சிக்கு ஒத்ததாம் என்று முரைப்பார், “நல்லருட் கண்ணீர் எனை ஆளலும் தகும் காண்” என்றும் இயம்புகின்றார். அருட் கண்ணீர் - அருள் ஒழுகும் கண்களை யுடையவரே.

     இதனால், தமது கழிகாமக் குற்றத்தைப் பொறுத்தருளல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (10)