58. கொடைமட விண்ணப்பம்

திருவொற்றியூர்

    அஃதாவது இரப்பாரது இயல்பு நோக்காது வேண்டுவது ஈதல் எடுத்தோதி விண்ணப்பிப்பது. இதன்கண் வரும் பாக்கள் பத்தும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

கட்டளைக் கலித்துறை

1203.

     நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
     பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
     என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
     மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.

உரை:

      திருவம்பலத்தின்கண் நின்று ஆடுகின்ற மின்னலைப் போன்ற சடையுடையவனாய்த் திருவொற்றியூரில் எழுந்தருளும் வேதியனாகிய சிவனே, நின்னைப் போன்ற தெய்வம் ஒன்று வேறே இல்லையென வேதங்கள் முழங்கவும், நின்னுடைய பொன்னிறத் தாமரை போலும் ஞானம் மணக்கும் திருவடியிரண்டையும் வழிபடாமையால் ஏழையாகிய, என்போன்றவர் உலகில் யாருமில்லை. எ.று.

     வேணி - சடை. அது மின் போல் ஒளி செய்வதாகலின், “மின் போன்ற வேணியனே” என்கின்றார். சேரமான் பெருமாளும், “மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை” (பொன்வண்ணத்) என்று உரைக்கின்றார். மக்கள் மண்ணில் வாழ்தற்பொருட்டு ஊன நடனமும், பேரின்ப வாழ்வு பெறுதற்பொருட்டு அம்பலத்தில் ஞான நடனமும் புரிவதுபற்றி “அம்பலத்தே நடஞ்செய் பெருமானே” எனப் பொதுப்பட புகல்கின்றார். வேதங்களை யோதியும் அவற்றின் உட்பொருளை உயர்ந்த முனிவர்கட்கு உணர்த்தியும் உதவுதலால் “வேதியனே” என விளம்புகின்றார். “சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் வேறில்லை” என்று திருமந்திரம் (5) உரைத்தலால், “நின் போன்ற தெய்வம் ஒன்றின்றென வேதம் நிகழ்த்தவும்” என்கின்றார். திருமந்திரத்தை வேதம் எனக் குறித்தலால், அது வேத சிவாகமங்களின் பொருளைத் தன்கண் கொண்டது எனச் சான்றோர் உரைக்கும் உண்மை வள்ளற்பெருமானுக்கு உடன்பாடென்று தெரிகிறது. பொன் போன்ற நிறமும் ஞான மணங் கமழும் புதுமலரின் தன்மையும் ஒருங்கு பெற்றிருத்தலால், சிவனுடைய திருவடிகளை, “நின் பொன் போன்ற ஞானப் புது மலர்த்தாள் துணை” எனவும் போற்றிப் புகழ்கின்றார். திருவடியைப் போற்றாமையினும் கீழ்ப்பட்ட அறியாமை பிறிது வேறின்மையின், “தாள் போற்றுகிலேன் அதனால் என் போன்ற ஏழையர் யாண்டுளர்” என உரைக்கின்றார். ஏழைமை - அறியாமை. “இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ” (இராம. பால) என்றாற்போல.

     இதனால், சிவபிரான் திருவடி நினையாத ஏழைமை கூறியவாறாம்.

     (1)