1204.

     வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
     நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
     ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
     பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.

உரை:

     வேதப் பொருளாயவனே, வெள்ளி மலையில் எழுந்தருளும் வித்தகனே, நீதியே வடிவானவனே, அம்பலத்தில் நிட்கள ஆனந்த நடம் புரியும் ஆதியானவனே, எங்களை ஆள்பவனே, மலைமகளாகிய உமாதேவி மகிழுமாறு மேனியிற் பாதியாகக் கொண்டவனே, எங்கட்குப் பரமும் அபரமுமாகிய பொருளே, மூன்று கண்களைக் கொண்ட கடவுளே. எ.று.

     வேதியன்-வேதப் பொருளும் வேதத்தை ஓதுபவனுமாயவன், வெள்ளி மலையையுடையவனாய் அதன்கண் வீற்றிருப்பவனாதலால், “வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகன்” எனக் கூறுகின்றார். வித்தகன் - ஞானமே திருமேனியாக உள்ளவன். நீதியன் - நீதியுருவினன். “நீதி பலவும் தன்ன வுருவாமென மிகுந்தவன்” (வைகா) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. மன்று - சிற்றம்பலம். நிட்களம் அருவுருவம். ஆனந்த நிர்த்தம் - இன்பம் விளைவிக்கும் நடனம். ஆதியன் - முதல்வன். ஆண்டவன் - உருவில்லாத உயிர்கட்கு உடல் கருவி கரணங்களின் வாயிலாக உலக வாழ்வு அளித்தவன், உமையொருபாகனாதலின், “மலையாள் மகிழும் பாதியன்” என்று சொல்கின்றார். உருவும் அருவுமாகிய உயிர்வகை யனைத்திற்கும் மேலும் கீழுமாயவன் ஆதலின், இறைவனைப் “பராபரன்” என்கின்றார். பண்ணவன் - கடவுள்.

      இதனால், பலவேறுருவில் பலவேறு வகையில் இறைவன் அருள் புரியும் திறம் கூறியவாறு.

     (2)