1205.

     பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
     மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
     விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
     கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.

உரை:

      பொருள்களை அழகுறப் படைப்பவனே, பசுபாசங்களை நீக்குகிற பரம்பொருளே, மண்ணுலகில் வாழுகின்ற என்னை அன்போடு அருள்பவனே, மலப்பிணிப்பை எனக்குத் துணையாமாறு மாற்றுகின்ற தேவனே, வெண்மையான எருதூர்பவனே, வெற்றி பொருந்திய நெற்றிக்கண்ணை யுடையவனே, என்னைப் பாதுகாப்பவனே, திருவொற்றியூரில் எழுந்தருளும் வேந்தனே. எ.று.

     பண்ணவன் - பண்ணுபவன்; பண்பட அமைப்பவன். பசு பாச அறிவுகளை நீக்கி, உண்மையறிவு நல்குபவர் என்றற்குப் “பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே” என்கிறார். “பசுபாச வேதனை ஒண்தளை யாயின தவிரவ் வருள் தலைவன்” (முதுகுன்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. பரம்பரன் - மேலாய பொருட்கெல்லாம் மேலாயவன். விண்ணகத் தேவர்களை விரும்பி யருளுவது போல் மண்ணகத்து மக்களில் ஒருவனாகிய எனக்கும் அருள்பவனே என்பாராய், “மண்ணவனேனை மகிழ்ந்தவனே” என்கின்றார். சிறப்பும்மை தொக்கது. மலவிருள் மறைப்பை நீக்கி, ஒளியாய் மாற்றி, ஞானக்காட்சி இனிது பெறச் செய்தலால், “மலம் மாற்றுகின்ற விண்ணவனே” என விளம்புகின்றார். சிவபெருமான் ஏறுவது வெள்ளை நிற எருதாகலின், “வெள்விடையவனே” எனப் போற்றுகின்றார். அறக்கடவுளின் நிறம் வெள்ளை யாதலின் இவ்வாறு கூறுகின்றார் எனினுமாம். நெற்றிக்கண்ணால் வெல்லுதற்கரிய அசுரர்களின் முப்புரத்தை எரித்து வென்றானாதலால், “வெற்றி மேவு நெற்றிக் கண்ணவனே” என உரைக்கின்றார். எப்பொழுதும் காத்தாள்பவனாதலால் “என்னைக் காத்தவனே” என்றும், ஒற்றியூர்க்குக் காவற் கடவுளாய் விளங்குதலின், “ஒற்றிக் காவலனே” எனவும் விளம்புகிறார். விரைந்து காத்தருளுதல் தோன்றக் “காத்தவன்” என இறந்த காலத்தாற் கூறுகின்றார்.

     இதனால், ஞான நெறியில் நிற்பார்க்கு அருட்கொடை வழங்கும் திறம் கூறியவாறு.

     (3)