1206.

     காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
     பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
     நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
     மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.

உரை:

      எனக்கு உடனாய் இருந்து காவல் செய்பவனே, அந்நாளில் மதுரையில் தருமியென்ற வேதிய இளைஞனுக்குப் பொற்கிழி எய்துவித்தற் பொருட்டுப் பாவலனாய் வந்தவனே, தொழுதெழும் பாணன் பொருட்டு இசைவாணனாய்ப் போந்து பாடிக் காட்டிப் பரிசழியா வண்ணம் ஆதரித்த நாவலவனே, தில்லைப் பதிக்குத் தலைவனே, கடலில் தோன்றிய நஞ்சினையுண்டருளிய பெரிய வல்லுநனே, மூன்றாகிய கண்களையுடைய தேவனே, திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் மன்னனே. எ.று.

                உயிர்க்குயிராய் இருந்து நலந் தீங்கு காட்டி வாழ்வித்தலின், “காவலனே” என்று கூறுகின்றார். “நானேதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. மாணி - மணமாகாத வேதிய இளைஞன். அவன் பொற்கிழி பெறுதற் பொருட்டுக் “கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாட்டைப் பாடித் தந்துதவிய செய்தியைப் புராணம் கூறுதலின், “அன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த பாவலனே” எனப் பகர்கின்றார். கட்டவிழ்த்த - கிழியைக் கட்டவிழ்த்துக் கொடுப்பித்த. பத்தியுடன் நாளும் பரவும் இயல்புடைய பாணன் என்பதற்குத் “தொழும் பாணன்” என்றும், அவனது இசைப்புலமையின் தகைமை கெடாது நிற்றற்பொருட்டு என்றற்கு “பரிசுற” என்றும், அவன் பொருட்டு செருக்கோடும் வந்த ஏமநாதனைத் தனது இனிய பாட்டிசையால் மனமுடைந்து ஓடச் செய்த நலம் பாராட்டிப் புராணம் கூறுதலின், “பாட்டளித்த நாவலனே” என்றும் இயம்புகின்றார். மாவலன் - பெரிய வல்லுநன். நஞ்சுண்டார் சாவது இயல்பாக, நஞ்சின் கொடுமை சாகப்பண்ணி, அதன் நிறங் கெடாது நிறுத்திக் கொண்ட வன்மை தோன்றக் “கடல் நஞ்சை யுண்ட மாவலனே” என்று சிறப்பிக்கின்றார். “விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்” (வேட்டுவ) என்று இளங்கோவடிகள் கூறுவது காண்க. பல தலைகளும், பல கைகளும், பல கண்களுமுடைய உருவினராய்த் தேவர் பலர் விண்ணுலகத்துள்ளனர் எனப் புராணங் கூறுதலின், “முக்கண் வானவனே” என்கின்றார். ஒற்றியூர்க்கண் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்த கோயில் கொண்டிருத்தலின் “ஒற்றி மன்னவனே” என உரைக்கின்றார்.

      இதனால், வேதிய மாணிக்கும், பாணற்கும், தேவர்க்கும் அருள் வழங்கிய கொடைமடம் கூறியவாறாம்.

     (4)