1207.

     மன்னவனே கொன்றை மாலையனேதிரு மாலயற்கு
     முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
     சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
     என்னவ னேஐயம் ஏற்பவனேஎனை ஈன்றவனே.

உரை:

      என்றும் உள்ளவனே, கொன்றை மாலையை அணிந்து கொள்பவனே, திருமால் பிரமன் ஆகியோர்க்கு மேற்பட விளங்குபவனே, அந்நாளில் நல்லாலின் கீழ் யோகாசனத்தில் இருந்து முனிவர் நால்வர்க்கு அறம் உரைத்தவனே, சிவபெருமானே, திருவொற்றியூரில் எழுந்தருளுகிற தூயனே, என்னை யுடையவனே, மனைதோறும் சென்று பலியேற்பவனே, என்னை ஈன்றளித்த தாய் போன்றவனே. எ.று.

     மன்னுதல் நிலை பெறுதலாதலின், சிவபெருமானை “மன்னவனே” என்கின்றார். “பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே” (பல்) எனச் சேந்தனார் குறிப்பது காண்க. தாருங் கண்ணியும் கொன்றை யாதலின், “கொன்றை மாலையனே” எனப் பொதுப்படப் புகல்கின்றார். படைத்தற்கு அயனையும் காத்தற்குத் திருமாலையும் தோற்றுவித்தவனாதலின், “திருமாலயற்கு முன்னவனே” என்று மொழிகின்றார். கல்லாலின் கீழிருந்து, சனகர் முதலிய நால்வர்க்கும் அறம் உரைத்த வரலாற்றைப் புராணம் கூறுதலின், “அன்று நால்வர்க்கும் யோகமுறை அறந்தான் சொன்னவனே” எனத் துதிக்கின்றார். மண்ணகத்து ஒற்றி நகர்க்கண் எழுந்தருளி, மக்கள் மனைதோறும் அடிவருந்தப் பலிவேண்டிச் சென்று திரிந்தானாயினும் தூய்மை கெடாமை பற்றி, “ஒற்றி மேவிய தூயவனே” எனவும், தமது நெஞ்சகத்தே இருந்து, அவ்வப்போது திருத்தியும் தெளிவித்தும் செம்மை நெறியிற் செலுத்துவதுபற்றி, “என்னவனே” எனவும் அருளுகின்றார். “உணர்வரியவன் உணர்வு தந்து ஒளியாக்கிப் பாசமானவை பற்றறுத்து உயர்ந்தவன்” (அற்புத) எனவும், “சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனை யாண்ட அந்தமிலா ஆனந்தம்” (கண்ட) எனவும், மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. கேவலத்தில் இருளிற் கிடந்த உயிரைச் சகலத்தில் உடம்பிற் புகுத்தி உலகில் தோற்றுவித்தலின் “என்னை ஈன்றவனே” என்கின்றார்.

     இதனால், அயன் மால்களைத் தோற்றுவித்தும் நால்வர்க்கு அறம் அறிவித்தும் அருளிய நலன்களை எடுத்தோதியவாறாம்.

     (5)