1210.

     சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
     நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
     தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
     பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.

உரை:

      திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் புண்ணியக் கடவுளே, ஞான மூர்த்தியே, தீயைக் கையிலேந்துகின்ற காவலனே, நலமே புரிபவனே, வேத மோதும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தேடிக் காண்டற்கரிய தன்மையை யுடையவனே, சிவமாகிய சுகமருளும் திருக்கைகளை யுடையனே, எமக்குரிய சதாசிவ மூர்த்தியே, பொன் மயமான திருமேனியை யுடையவனே, முப்புரங்களையும் அழித்தவனே, எமக்கு நினது நல்லருளை வழங்கும். எ.று.

     புண்ணிய வினைக்குரிய போகங்களை நுகர்விக்கும் கடவுளாதல் தோன்ற, “புண்ணியன்” எனப் புகல்கின்றார். “புண்ணியர் பூதியர் பூதநாதர் புடை படுவார்தம் மனத்தார் திங்கட் கண்ணியர்” (ஆவூர்) என ஞானசம்பந்தர் ஓதுவது காண்க. ஒரு கையில் எரி யேந்தி யாடும் இயல்பினனாதலால், “அனல் செங்கையி லேந்திய சேவகன்” எனச் சிவனைத் தெரிவிக்கின்றார். எப்போதும் வேதங்களை யோதுபவன் என்பது பற்றி, பிரமனை “மறை நான்முகன்” எனச் சிறப்பிக்கின்றார். அரி பிரமாதிகளாற் காண்டற் கரியவ னென்று பெரியோர் கூறுவதால், “நான்முகன் மாலுக்கும் நாடரிதாம் தன்மையன்” எனச் சாற்றுகிறார். சங்கரன் என்பது பொதுவாய்ச் சுகமருள்பவன் எனப் பொருள்படுதலால், இன்ன சுகமெனத் தெரித்து மொழிவாராய்ச் “சிவசங்கரன்” என வுரைக்கின்றார். வழிபடுதற்குரியது சிவலிங்கமாகிய சதாசிவ மூர்த்தமாதலால், “எம் சதாசிவனே” எனக் கிழமை தோன்றக் கிளந்து மொழிகின்றார். திரிபுரத்தசுரர்களின் மூவகை மதில்களையும் எரித் தழித்தமை விளங்க “முப்புராந்தகனே” என்று இயம்புகின்றார்.

     இதனால், நலம்பல எடுத்தோதி அருட்கொடை வேண்டியவாறாம்.

     (8)