1212. கண்டவ னேசற்றும் நெஞ்சுருகாக் கொடுங் கள்வர்தமை
விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும்
உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக்
கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.
உரை: எங்கும் எல்லாவற்றையும் எக்காலத்தும் கண்டறிபவனே, ஏக்கமுற்று மனமுருகாத கொடிய கள்ள நெஞ்சம் உடையவர்களினின்றும் நீங்கியவனே, கடல் கொதிக்கும்படி யெழுந்த விடத்தை முற்றவும் உண்டருளியவனே, ஒப்புச் சிறிதுமில்லாத உயர்வைக் கொண்டவனே, திருவொற்றியூர்க் கோயிலில் எழுந்தருளும் குருபரனே, அருள் செய்க. எ.று.
இடம், பொருள், காலமாகிய வேற்றுமையின்றி எல்லாம் அறியும் இயல்புடைமை விளங்கக் “கண்டவனே” எனப் பொதுவகையிற் புகல்கின்றார். சிறிதளவும் இரக்கமும் அதனாற் பிறக்கும் உருக்கமும் இன்றி நேர்மையின்றி வஞ்சம் நிறைந்த தீய மாக்களை, “சற்றும் நெஞ்சுருகாக் கொடுங் கள்வர்” என்று குறிக்கின்றார். அவர்களைச் சிறிதும் வெறாத பேரருளாளனாயினும், அவரிடத்தினின்றும் விலகியே யிருப்பன் எனற்கு, “விண்டவன்” என்றும் இயம்புகின்றார். இறைவனது அருள்நலத்துக்குச் சான்று கூறலுற்ற வள்ளற்பெருமான், அவர் விரைந்து ஏற்று உண்டருளிய நஞ்சின் கொடுமையை, “கடல் வேம்படி பொங்கும் விடம்” எனவும், உண்ணப்படாது சிறிது எஞ்சினும் விளையும் தீமை பெரிதாம் எனக்கருதி, முற்றவும் உண்டமை புலப்பட, “விடம் அனைத்தும் உண்டவனே” எனவும் இயம்புகின்றார். ஒப்பில்லது உயர்ந்த தொன்றனை யுடையதாகலா மென்பது பற்றி, “ஒப்பொன்றிலாத உயர்வுதனைக் கொண்டவனே” என வுரைக்கின்றார். மக்களுயிர் நன்கு முயன்றும் உண்மை யுணரமாட்டா நிலையில் தன்மை முன்னிலை படர்க்கை யென்ற மூவகையிடங்களில் ஒன்றில் நின்று உண்மையொளி காட்டுவது இறைவனது அருளியல்பாதல் கண்டு, “குருபரனே” என்று கூறுகின்றார்.
இதனால், இறைவனது அருளியல் காட்டியவாறாம். (10)
|