59. திருக்காட்சிக் கிரங்கல்
திருவொற்றியூர்
அஃதாவது
சிவமூர்த்தத்தின் திருவுரு நலங்களைக் கண்டு இன்புற விழைந்த அவ்விழைவு முற்றாமைக்கு மனம்
மெலிந்து இரங்குவதாகும். திருவொற்றியூர்த் தியாகப்பெருமான் திருமேனி இயல்பிலே காண்பார்
கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மகிழ்விக்கும் சிறப்பமைந்ததாயினும், திருவீதி யுலா வருங்கால்
செயற்கைப் புனைவுகளால் வனப்பு மேம்படச் செய்யப்பெற்றிருக்கும்; அதனைக் காண்டற் கெழுந்த
வேட்கை யாது காரணத்தாலோ நிறைவெய்தாமையின் நெஞ்சின்கண் தங்கி வள்ளற் பெருமானை
வருத்துவதாயிற்று. அதனால் ஏக்கம் மிகுந்து சிவபெருமானுடைய பொன்முகத்தை நினைக்கின்றார்;
அதன்கண் ஒளிரும் முக்கண்களையும் நினைக்கின்றார்; நீல நிறம் கொண்டு திகழும்
திருக்கழுத்தையும் தோளழகையும் எண்ணுகின்றார். கொன்றை மாலை யணிந்து விளங்கும்
புயக்குன்றமும், மங்கை பங்கனாகிய திருமேனியும் அதன் செம்மைநிறப் பொலிவும்
நெஞ்சக்கிழியில் தோன்றுகின்றன. முடி முதலாகத் தோன்றும் நினைவு திருவடியை யடைகிறது.
திருவடியின் சிறப்பும், திருவடி நீழலின் மாண்பும் வள்ளலார் நினைவைப் பரவசப் படுத்துகின்றன.
இந்நலங்களை ஒருசேரக் காண்டற்கமைந்த திருவுலாக் காட்சியைக் காணலாகும் பேற்றினைப்
பெறாதொழிந்தேனே என இணைந்தேங்கி வருந்துகின்றார்.
தரவு கொச்சகக் கலிப்பா 1213. மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலேனே.
உரை: பண்ணிசையிற் பிறக்கும் இன்ப மயமான பரஞ்சுடரே, என்னுடைய பண்ணிரண்டையும் போல்பவனே, மண்ணுலக வாழ்க்கையில் உண்டாகும் துன்பங்களால் மதிமயங்கி வலிய நோய்களால் மனம் புண்பட்டு வருந்துகிற பொய்யனாகிய யான், உனது அழகிய திருமுகத்தைக் காணும் பேறு இல்லாதவனாயுள்ளேன், அருள் செய்க. எ.று.
பண்ணிடைப் பிறக்கும் இசை யின்பம் இறை யின்பமாக எண்ணுபவாதலின், “பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே” என்கின்றார். “பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி” (கயிலை) என நாவுக்கரசரும், “பண்ணுளீராய்ப் பாட்டு மானீர்” (வெண்காடு) என நம்பியாரூரரும் கூறுவனவும் பிறவும் காண்க. கண்ணிற் சிறந்த வுறுப்பு வேறில்லை யாதலால், “என்னிரண்டு கண்ணே” என்றும், கண் பெற்ற பயன் அதுவாகலின், “உன்பொன் முகத்தைக் காணக் கிடைத்திலனே” என்றும் சொல்லி வருந்துகிறார். மயக்கும் மாயா காரியமாதலால் மண்ணக வாழ்வால் மதி மயங்கினமை விளங்க, “மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து” எனவும், ஆசை வயப்பட்டு ஆகாதன நுகர்ந்து நோயுறுவது மக்களின் இயல்பாதலால் “வன்பிணியால் புண்ணேயும் நெஞ்சம்” எனவும் புகல்கின்றார். உடம்பு பிணியுற்றபோது நெஞ்சம் அதனையும் அதன்வழி யெழும் நினைவுகளையும் நினைந்து புண்ணாகும் தன்மை பற்றி, “நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்” என வுரைக்கின்றார். நிலையா வாழ்வுடைமை தோன்றப் “பொய்யவன்” என்பது மரபாயிற்று. “இன்றுளேன் நாளை யில்லேன் என்செய்வான் தோன்றினேனே” (தனி. நேரி) என திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க.
இதனால், திருவொற்றியூர்ப் பெருமான் திருமுகம் காணப் பெறாமைக்கு வருந்துவது கூறியவாறாம். (1)
|