1214. மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
உரை: தெளிவமைந்த உண்மை ஞானச் செல்வமாகிய சிவபரம் பொருளே, மருட்சி மிக்க வலிய வினைகளாலும், அவை யேதுவாகத் தோன்றும் நோய்களாலும், மிக்க துன்பங்களாலும், இருள் படிந்த நினைவுகளாலும் நெருக்குண்ட ஏழையாகிய யான், நினது அருளொளி திகழும் முக்கண்ணின் அழகு கண்டு இன்புற ஆசைப்பட்டேன், கண்டிலேன். எ.று.
தெருட்சியாற் சிறத்தற்குரிய அறிவை முதற்கண் மயக்கி மருட்சியுறச் செய்வது, இறையாணையிற் பயனுகர்விக்கப் போதரும் வினையின் செயலாதலால், “மருளார்ந்த வல்வினையால்” எனவும், உடலிற் பிணி தோற்றுவித்து அறிவைப் பேதுறுவிப்பது பற்றி, “வன்பிணியால்” எனவும், இரண்டாலும் உயிர் துயருறுமாறு விளங்க “வன்துயரால்” எனவும், இவ்வாற்றால் நெஞ்சம் தெளிவிழந்து இருள்மிக்க நினைவுகட்கு இடனாகித் தாக்கப்பட்டு மெலிதலால், “இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையேன்” எனவும் இயம்புகின்றார். இடியுண்ணல், தாக்கி நெருக்கப்படுதல், இறைவன் ஆணையின் இருவினை யியங்கு மென்பதைச் சிவஞான போத இரண்டாம் சூத்திரத்தின்கண் “போக்கு வரவு புரிய இருவினையின் ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே” என்று ஆசிரியர் உரைப்பது அறிக. தெளிநிலை ஞானமாயினும், அதன் ஆர்ந்த நிலை மெய்ஞ்ஞானமாதல் புலப்படுத்தற்குத் “தெருளார்ந்த மெய்ஞ்ஞானம்” என்றும், அது சிவானந்தப் பெருஞ் செல்வமாதலால் “செல்வச் சிவமே” என்றும் தெரிவிக்கின்றார். கண்கட் கழகு அருள் நாட்டமாதல் பற்றி, “அருளார்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே” எனப் புலம்புகின்றார்.
இதனால், அருள் நோக்கம் கொண்ட கண்ணழகு காண்டற்குற்ற வேட்கை விளம்பியவாறாம். (2)
|