1215. வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன்
பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த
நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த
அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
உரை: வல்லை யொத்த கொங்கைகளை யுடைய இளமகளிரின் வேட்கை மயக்கத்தால் வருத்தமுற்ற வஞ்சநினைவுடையனாகிய யான் பொல்லாதவர்களாகிய திரிபுரத்தசுரர்களுடைய மதில்களை எரித்தழித்த புண்ணியனும், நல்லவர் தொழுகின்ற தில்லை நகர்க்குத் தலைவனுமாகிய கூத்தப் பெருமானே, உலகுக்கு நலம் விளைவித்த இருண்ட திருக்கழுத்தின் அழகைக் கண்டு இன்புற ஆசைப்பட்டேன்; கண்டிலேன். எ.று.
வல் - சூதாடுவோர் கையாளும் கருவி. இளமகளிரின் இளமுலைகள் காண்பார் கருத்தில் காமவேட்கையை விளைவிக்கும் சிறப்புடைமை பற்றி, “வல்லார் முலையார் மயல்” எனவும், மனத்தின்கண் தோன்றும் மயல் பிறர்க்குத் தெரியாமல் மறைக்கப்படுவது பற்றி, “மயலுழந்த வஞ்சகனேன்” எனவும் உரைக்கின்றார். பொல்லார் - பிறர்க்குப் பொல்லாங்கு செய்பவர். அக் காரணத்தால் அவர்களது புரம் எரிக்கப்பட்ட தென்பது விளங்க, “பொல்லார் புரமெரித்த புண்ணியனே” என்றும், சிவனுடைய செயல்கள் யாவும் புண்ணியச் செயல்களே யாதலைக் கண்ட புறச்சமயத்தவரும் புண்ணியன் எனக் குறிப்பது புலப்பது புலப்படப் “புண்ணியனே” என்றும் புகல்கின்றார். புறச்சமயத்தவரான திருத்தக்கதேவர், சிவபெருமானை, “போக மீன்ற புண்ணியன்” என்றாராக, அதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர், “புண்ணியன் என்றார், திரிபுரத்தை யழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின்” (சீவக. 362) எனக் கூறுகின்றார். நமது திருநாவுக்கரசர், புரமெரித்தது புண்ணியச் செயல் என்ற கருத்துப்பட, “போரார் புரங்கள் புரள நூறும் புண்ணியனை” என்று போற்றுவது காண்க. பொய்யைக் கடிந்தொழுகுவது பெரு நலமாதலால், “பொய் மறுத்த நல்லார்” எனப் புகழ்கின்றார். கடல் நஞ்சை யுண்டு பல்லுலகும் பல்லுயிரும் வாழச் செய்த நலம் பற்றி, “நன்றளித்த அல்லார் களம்” எனப் புகழ்கின்றார். அல்லார்களம் - கரிதாகிய கழுத்து. நிறம் கரிதாயினும் அழகும் ஒளியும் கொண்டு திகழ்வதால், களத்தின் அழகு காண ஆசைப்பட்டேன்; காண்கிலேன் என்பாராய், “களத்தின் அழகுதனைக் கண்டிலனே” என அவலிக்கின்றார்.
இதனால், அனைத்துயிர்க்கும் அருள் புரிந்த திருக்கழுத்தின் அழகு காண விழைந்தமை தெரிவித்தவாறாம். (3)
|