1216. நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன்
தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச்
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம்
தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.
உரை: நோய்களால் மனமும் உடம்பும் மெலிந்து உனது திருவருளையே எதிர்நோக்குகின்ற எளியவனாகிய யான், எனக்குத் தாயானவனும் தந்தையானவனுமாய், ஆன்மாக்களைப் பெற்ற மக்களைப் போற் பேணிக் காப்பவனுமாகிய சிவபெருமானே, தூயவனே, நின்னுடைய பொன்னிறத் தோள்களின் அழகு காண ஆசைப்பட்டு இன்னும் காணா திருக்கின்றேன். எ.று.
மனநோயும் உடனோயும் என நோய் இருவகைத் தாதலாற் பொதுப்பட, “நோயால் மெலிந்து” என நுவல்கின்றார். நோய்க் கெல்லாம் மருந்து திருவருளல்லது வேறில்லாமை யுணர்ந்து அதனையே வேண்டி மேனி இளைக்கின்றமை புலப்பட, “அருள் நோக்குகின்ற நொய்யவனேன்” எனவும், உடல் மெலிவு போக்கலில் தாயாகியும், மன மெலிவு நீக்குதலில் தந்தையாகியும் அருளுமாறு விளங்க, “தாயானவனே என் தந்தையே” எனவும் சொல்லுகின்றார். அன்பர் என்றது, ஈண்டு அன்பு செய்யும் ஆன்மாக்களை என அறிக. நல்லது செய்யினும் அல்லது புரியினும் பெற்ற சேயைப் பெற்றோர் அன்பாற் பேணிப் புறந்தருவது போல அன்பர்களைப் பேணிக் காக்கும் பேரருளை நினைக்கின்றமையின் “அன்பர்தமைச் சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே” என்றும், அன்பர் பொருட்டுத் தூய்மை நோக்காது செய்வன வெல்லாம் செய்கின்றமை விளங்கத் “தூயா” என்றும் சொல்லிப் பராவுகின்றார். சுந்தரம் - அழகு.
இதனால், தோளழகு காண ஆசைப்பட்டு வருந்துகின்றமை கூறியவாறாம். (4)
|