1217.

     வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தே
     அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
     மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
     பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.

உரை:

     வல்லை யொத்த கொங்கையையுடைய இளமகளிரின் வன்மையான காமமயக்கத்தால் வருந்திய மனத்தை யுடைய யான், அன்னையே, அப்பனே, எனக்கு ஐயனே, அரிய அமுதமே, மன்னவனே, மாணிக்க மணியே, மலைமகளாகிய உமாதேவி பார்த்து மகிழும் உன்னுடைய பொன்போன்ற பூக்கும் கொன்றை மாலை யணிந்த தோள்களைக் கண்டு இன்புறும் பேறு இல்லாதவனாக இருக்கிறேன். எ.று.

     வல் - சூதாடுவோர் கையாளும் கருவி. இளமகளிரின் கொங்கையே வல்லொப்பதாகலின், “வன்னேர் முலையார்” என்றது இளமகளிரையாயிற்று. அவர்களின் கட்பார்வையாலும் ஒளிமுகத்தாலும், இளமுலையாலும் பிறக்கும் காமமயக்கம் வலிமை மிக்கதாதலால், “மயலுழந்த வன்மனத்தேன்” என உரைக்கின்றார். வன்மை மயற்கேற்றப்பட்டது. பெற்ற அருமைபற்றி, “ஆரமுதே” என்று இசைக்கின்றார். மலையரசன் மகளாதலால் உமாதேவி “மலைமகள்” எனப்படுகின்றாள். இதழி - கொன்றை. “காணப்பெற்றிலன்” எனவே, காண்டல் வேட்கை மிக்கிருந்தமை பெற்றாம்.

     இதனால், தோளழகு காணும் வேட்கை மிகுதி விளம்பியவாறாம்.

     (5)